செய்திகள்
வைகோ

தமிழக மீனவர்கள் கைது- வைகோ கண்டனம்

Published On 2020-12-15 08:49 GMT   |   Update On 2020-12-15 08:49 GMT
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. இவ்வாறு எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்த 121 படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுக் கிடக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப்படகுகளை மீட்பதற்கு இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், கடந்த நவம்பர் மாதம் இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு உத்தரவிட்டன.

அதன் பின்னரும் அவற்றை மீட்பதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்துடன், இலங்கை அரசு இலங்கை கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது.

இந்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தால். மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் இந்திய எல்லையிலேயே கைது செய்யப்படுவதும் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கின்றன.

இந்தநிலையில், ராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஐந்து விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நேற்று முன்தினம் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக செயல்பட்டு தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
Tags:    

Similar News