செய்திகள்
கோப்புபடம்

இ.எஸ்.ஐ., திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள்

Published On 2021-07-23 08:47 GMT   |   Update On 2021-07-23 08:47 GMT
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி முழுமையாக முடங்கியதால் இந்த துறை சார்ந்து மட்டும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்தனர்.
திருப்பூர்:

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கடன் திருப்பி செலுத்த அவகாசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்த மத்திய அரசு இ.எஸ்.ஐ.,ல் சிகிச்சை பெறுவதற்கான விதிமுறையையும் தளர்த்தியது. 

6 மாதங்களில் 78 நாட்கள் தொழிலாளர்கள் பணிபுரியாத போதும் நடப்பு 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இ.எஸ்.ஐ.,ல் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர்.

நடப்பாண்டில், மே, ஜூன் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தது. திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி முழுமையாக முடங்கியதால் இந்த துறை சார்ந்து மட்டும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்தனர். ஆனாலும் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஊரடங்கு இல்லாததால் நடப்பு ஆண்டு இ.எஸ்.ஐ.,ல் சிகிச்சை பெறுவதற்கான விதிகளை அரசு தளர்த்தவில்லை.

கொரோனா முதல் அலை ஏற்படுத்திய உடல் நல பாதிப்பு, முதல் அலைக்குப்பின் வேலை இழப்பு, புதிதாக உருவான உடல் நல கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 6 மாதங்களில் பல தொழிலாளர்களால் 78 நாட்கள் பணிபுரிய முடியவில்லை.

இதனால் இத்தகைய தொழிலாளர்கள் உயர் சிகிச்சை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் தமிழகத்தில் தற்போதுதான் நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்கியுள்ளன. 2 மாதமாக வேலை இல்லாததால் வருவாய் இன்றி பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நெருக்கடியான இச்சூழலில் இ.எஸ்.ஐ.யில் சிகிச்சை பெற முடியாதது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே குறைந்தபட்ச பணி நாட்களில் தளர்வு அளித்து சிகிச்சை பெற அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News