செய்திகள்
கைதான போலீஸ்காரர் மணிராஜன், கபடி பயிற்சியாளர் சீமான் மற்றும் ஏஜெண்ட் ராஜீவ்காந்தி

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த போலீஸ்காரர் கைது

Published On 2019-12-04 03:25 GMT   |   Update On 2019-12-04 03:25 GMT
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டதாக போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த போலீஸ்காரர் மற்றும் சான்றிதழ் வழங்கிய சென்னை கபடி பயிற்சியாளர் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க செல்போன் எண் வழங்கப்பட்டு உள்ளது. அந்த எண்ணுக்கு தகவல் தெரிவித்த ஒருவர், விளையாட்டு முன்னுரிமை ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் கொடுத்து சிலர் போலீஸ் வேலையில் சேர்ந்து வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கமுதி தாலுகா புதுக்கோட்டையை அடுத்த ஓ.கரிசல்குளம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 31) என்பவர் ஏஜெண்டாக இருந்து போலி சான்றிதழ்கள் பெற்று கொடுத்ததாக தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

பிடிபட்ட ராஜீவ்காந்தி சென்னை வளசரவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான்(57) என்பவர் மூலம் தனக்காக விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் போலீஸ் பணியில் சேர போலி சான்றிதழ் பெற்றுள்ளார். ஆனால் அவரால் தேர்வில் கலந்துகொண்டு தகுதி பெறமுடியாமல் போனதால், தனது உறவினர்களுக்கு இதுபோன்று சான்றிதழ் வாங்கி கொடுத்து வேலையில் சேர்க்கலாம் என்றும், அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளார்.

அதன்படி மேற்கண்ட சீமானிடம் சான்றிதழ் பெற்று தனது உறவினர்கள், நண்பர்கள் சிலரை போலீஸ் வேலைக்கு சேர்த்துள்ளதாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில் பிடிபட்ட ராஜீவ்காந்தியை வைத்து சீமானிடம் போலீசார் பேச வைத்தனர். தங்களுக்கும் அதுபோன்ற போலி விளையாட்டு சான்றுகள் வேண்டும் என்று கேட்டதற்கு, முன்பை விட அதிக தொகை கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியதாக தெரிகிறது. அதனை ஒப்புக்கொண்டு போலீசாரும் பணம் செலுத்தினர். இந்த பணத்தை பெற்றுக்கொண்டு சான்றிதழ் கொடுத்தபோது போலீசார் சீமானை கையும் களவுமாக கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சீமான் கபடி பயிற்சியாளராக இருப்பதால் அதன் மூலம் சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்றதாக சான்றிதழ்களை வழங்கி மோசடி செய்துள்ளார்.

இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையும், சிலரிடம் இன்னும் அதிகமாகவும் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இவ்வாறு சான்றிதழ் பெற்ற சிலர் ஏற்கனவே போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளதும், தற்போது நடந்து முடிந்துள்ள காவலர் தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் 5 பேர் பங்கேற்று உள்ளதும் அம்பலமானது.

மேலும் ஓ.கரிசல்குளம் பகுதியை சேர்ந்த மணிராஜன்(23) என்பவர் இதுபோன்று சான்றிதழை ராஜீவ்காந்தி மூலம் சீமானிடம் ரூ.15,000 கொடுத்து பெற்று போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். இதற்காக சீமான் கடந்த 2014-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டியில் மணிராஜன் பங்கேற்றதாக சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இதன்மூலம் விளையாட்டு ஒதுக்கீட்டில் காவலராக தேர்வாகிய மணிராஜன், திருச்சி ஆயுதப்படையில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இதனை அறிந்த தனிப்படை போலீசார் திருச்சி சென்று போலீஸ்காரர் மணிராஜனை கைது செய்தனர்.

இதுதவிர ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையில் ஒருவரும் இதுபோன்று சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரையும், தற்போது நடந்து முடிந்துள்ள காவலர் தேர்வில் போலி விளையாட்டு சான்றிதழை சமர்ப்பித்த 5 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அத்துடன் மணிராஜன் போன்று போலீஸ் வேலையில் சேர்ந்தவர்களையும் கைது செய்யவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:-

கபடி மட்டுமல்லாது மேலும் பல விளையாட்டுகளிலும் தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டதாக இதுபோன்று போலி சான்றிதழ்களை கொடுத்து பலர் பணியில் சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்காரணமாக விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து உறுதி செய்யுமாறு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேறு பல துறைகளிலும் இதுபோன்று மோசடியாக வேலையில் சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளதால் அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News