செய்திகள்
கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி

கடலூர் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைக்க கலெக்டர் உத்தரவு

Published On 2020-10-16 08:08 GMT   |   Update On 2020-10-16 08:08 GMT
கடலூர் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைக்க கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தனியார் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சோலார் சக்தியில் இயங்கும் கைகழுவும் எந்திரம் ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இதை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கைகளை கழுவி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் உலக கை கழுவும் தினத்தையொட்டி நேற்று அரசு மருத்துவமனை பொதுப்பிரிவில் ஒரு புதிய கை கழுவும் எந்திரத்தை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்து, கைகளை கழுவி நோயாளிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர், பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு வெளியில் மரத்தடியில் நின்று கொண்டிருந்த நோயாளிகளின் உறவினர்களை பார்த்து, இங்கு கூட்டமாக நிற்கக்கூடாது. நோயாளிகளை பார்க்க வந்த இடத்தில் கொரோனாவை பரப்பி விடாதீர்கள், கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு வெளியே நோயாளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் அமரும் வகையில் அங்கு நிழற்குடை ஒன்று அமைக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, நிலைய மருத்துவர் குமார், என்.எச்.எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரிமேலழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News