செய்திகள்
ஈரோட்டில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை மாவட்ட கலெக்டர் சி கதிரவன் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

ஈரோடு மாவட்டத்தில் 4,318 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்

Published On 2021-01-04 03:54 GMT   |   Update On 2021-01-04 03:54 GMT
ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 318 பேர் குரூப்-1 தேர்வை எழுதினார்கள்.
ஈரோடு:

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் குரூப்-1-ல் அடங்கிய துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இந்த தேர்வுக்காக ஈரோடு நகரில் 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் வேறு எங்கும் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. இந்த தேர்வில் 19 கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 8 ஆயிரத்து 13 பேருக்கு தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சீட்டு அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 13 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4 ஆயிரத்து 318 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 695 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலான தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது, கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தேர்வு மையத்தின் முன்புறத்தில் வெப்பமானி மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.

ஈரோடு செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, ‘தேர்வு எழுத வந்த அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் தேர்வர்களின் வசதிக்காக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது’ என்றார்.
Tags:    

Similar News