செய்திகள்
இடிந்து விழும் நிலையில் உள்ள மேலும் ஒரு சுற்றுச் சுவர்

மேட்டுப்பாளையத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேலும் ஒரு தடுப்பு சுவர்

Published On 2019-12-05 10:05 GMT   |   Update On 2019-12-05 10:05 GMT
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாகி உள்ள நிலையில் மேலும் ஒரு தடுப்பு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானார்கள்.

அதே தெருவின் பக்கத்தில் 29-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் அருகில் அண்ணா நகர் பள்ளம் என்ற ஓடை உள்ளது.

இந்த பள்ளம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பள்ளத்தின் அருகில் தனியார் சுற்றுச்சுவர் ஒன்று 15 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக இந்த சுற்றுப்புற சுவரின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த சுற்றுச் சுவரும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அப்படி இடிந்து விழுந்தால் ஏ.டி. காலனி போல் உயிர் பலி ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த சுற்றுச் சுவரை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என அண்ணா நகர் பகுதி மக்கள் சுவர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஏ.டி. காலனிக்கு ஆறுதல் கூற வரும் அரசியல் கட்சி தலைவர்களிடம் அப்பகுதி பொது மக்கள் நடூர் காலனி மேல் பகுதியில் உள்ள வீடுகளை ஒட்டி இன்னும் உயர்ந்து நிற்கும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்று சுவரை அகற்றும் படி கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியானவர்களில் குருசாமி என்ற கூலித்தொழிலாளியும் ஒருவர் ஆவார். இவரது மனைவி சுதா.

இவர்களுக்கு வைஷ்ணவி, மணிகண்டன் ஆகிய குழந்தைகள் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று சுதா தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்கு சென்று இருந்தார். இதனால் 3 பேரும் உயிர் தப்பினார்கள்.

கணவரையும் வீட்டையும் இழந்த சுதா தற்போது தங்க இடமின்றி தனது குழந்தைகளுடன் பரிதவித்து வருகிறார்.

எனது கணவர் குருசாமி பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். அவரும் எங்களுடன் விசே‌ஷ வீட்டிற்கு வந்து இருந்தார். ஆனால் இரவில் தங்குவதற்கு வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் இப்படி ஆகி விட்டது. நான் தற்போது தங்க இடமில்லாமல், சாப்பிட வழியில்லாமல், மாற்று துணி கூட இல்லாமல் இரு குழந்தைகளுடன் தவித்து வருகிறேன்.

மகள் வைஷ்ணவி 5-ம் வகுப்பு படிக்கிறாள். மகன் மணிகண்டன் 6-ம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

அவர்கள் அப்பா எங்கே? என்று கேட்கும் போது என்னால் பேச முடியாமல் தவிக்கிறேன். எங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

17 பேர் உயிரை பலி வாங்கிய காம்பவுண்டு சுவர் பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது-

உயிர் பலி வாங்க காரணமாக இருந்த சுற்றுச் சுவரை இடிக்க வேண்டும் என நாங்கள் வீட்டின் உரிமையாளரை பல முறை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அப்படி சந்திக்க செல்லும் போது நாயை அவிழ்த்து விட்டு எங்களை துரத்துவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News