ஆன்மிகம்
தீபத்திருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-12-02 04:08 GMT   |   Update On 2019-12-02 04:08 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை காண உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. கொடியேற்றத்தை காண பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் கோவிலில் குவிய தொடங்கிய வண்ணம் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தங்ககொடி மரத்தில் காலை 6.15 மணி அளவில் கொடியேற்றினர். அப்போது கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌‌ஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

முன்னதாக தங்க விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சிதர மலை உச்சியில் மகா தீபம் ஏற்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Tags:    

Similar News