செய்திகள்
நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பெண்கள் காண்பித்தனர்

புதுவையில் தொடர் மழை- 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

Published On 2021-11-08 04:54 GMT   |   Update On 2021-11-08 05:52 GMT
மதகடிப்பட்டு கிராமத்தையொட்டிய தமிழக பகுதியான குமளம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் பூச்செடிகள் பயிரிடப்பட்ட நிலங்களிலும் மழை நீர் புகுந்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.

புதுவையையொட்டிய தமிழக பகுதியிலும் தொடர் மழை பெய்வதால் வீடுர் மற்றும் சாத்தனூர் அணைகள் நிரம்பியுள்ளது. அணை நீர் வெளியேற்றப்படுவதால் மலட்டாறு மற்றும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. புதுவையின் கிராமப்புற பகுதிகளில் மழை வெள்ளம் விவசாய நிலங்களில் புகுந்துள்ளது.

ஏம்பலம், சேலியமேடு, கிருமாம்பாக்கம், நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லூர், பாகூர், குருவிநத்தம், கல்மண்டபம், மடுகரை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெல் பயிர் பயிரிடப்பட்டிருந்தது.

இங்கு 1000-க்கும் அதிகமான ஏக்கரில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன.



இதேபோல், மரவள்ளி கிழங்கு, மஞ்சள், கருணை கிழங்கு, வாழை, கரும்பு மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்த குச்சிபாளையம், சிலுக்காரிபாளையம், பி.எஸ்.பாளையம், மணலிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், சோம்பட்டு, திருக்கனூர், கொடாத்தூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நீரில் மூழ்கி பயிர்கள், கிழங்குகள், அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதகடிப்பட்டு கிராமத்தையொட்டிய தமிழக பகுதியான குமளம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் பூச்செடிகள் பயிரிடப்பட்ட நிலங்களிலும் மழை நீர் புகுந்துள்ளது.

விவசாய நிலத்துக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். நீர்ப்பாசன வழிகளில் அடைப்புகளை அரசு சீர் அமைக்காத காரணத்தினால் வெள்ள நீர் கடல் நோக்கி செல்ல முடியாமல் விவசாய நிலத்துக்குள் புகுந்ததாக விவசாயிகள் புகார் செய்தனர்.


Tags:    

Similar News