உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

4 வழிப்பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம்

Published On 2022-04-16 08:41 GMT   |   Update On 2022-04-16 08:41 GMT
கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழிப்பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ், மத்திய போக்குவரத்துதுறை மந்திரி நிதின்கட்காரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:-

புதுவை கிழக்கு கடற்கரை சாலை 4 வழிப்பாதைக்கு ரூ.3 ஆயிரம் கோடி மத்திய போக்குவரத்து அமைச்சகத்தால் நிதி ஒதுக்கப்பட்டு  பணிகள் நடந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவி அளித்த அறிவிப்பு புதுவை மக்களின் கனவை கலைத்துள்ளது. 

தமிழக அரசு இத்திட்டத்திற்கான ஆட்சேபனை இல்லா சான்றிதழை அளிக்க நீண்டகாலமாக தயங்குவதால் இத்திட்டம் ரத்து  செய்யப்படுவதாகவும், அனைத்து பணிகளும் நிறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்திட்டத்தை  கைவிட்ட பின் தமிழக அரசு ஆட்சேபனை இல்லா சான்றிதழை தேசிய ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ளது. 

இந்த விஷயத்தில் அமைச்சர்  உடனடியாக தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். இத்திட்டத்தை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும். 

ஏற்கனவே புதுவை மக்கள் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம் செயல்படாததால் விரக்தியில்  உள்ளனர். மக்களின் வருத்தத்தைப் போக்கும் வகையிலும் கடற்கரை சாலை திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.

இத்திட்டம் மற்ற மாநிலத்தவரை விட புதுவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா, தொழில்கள், மருத்துவம் போன்ற  துறைகளை உள்ளடக்கிய புதுவையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு இத்திட்டம் ஒரு ஊக்கியாக இருக்கும். 

இத்திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும். பயணத்திற்கு தேவையான எரிபொருள், கால அளவு மற்றும் மாசு குறையும். மக்களுக்குபாதுகாப்பான பயணத்தை அளிக்கும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் பயணிகளுக்கு இத்தலம் ஒரு மாற்றுப்  பாதையை அளித்து சென்னை-திருச்சி வழித்தடத்தில் நெரிசலை குறைக்கும்.

எனவே பல்வேறு காரணங்களுக்காகவும் பாரத்மாலா  பரியோஜனா திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் இத்திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொடங்கி முடிக்க  வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News