செய்திகள்
ஜிகே வாசன்

நிவர் புயல் பாதிப்பை தடுக்க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்- ஜிகே வாசன்

Published On 2020-11-24 06:00 GMT   |   Update On 2020-11-24 06:00 GMT
நிவர் புயல் பாதிப்பை தடுக்க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் உருவாகி தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்தியை தமிழக மக்கள் முக்கிய கவனத்தில் கொண்டு பத்திரமாக இருக்க வேண்டும்.

‘நிவர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் மழையோ. கன மழையோ, மிக கன மழையோ பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நிவர் புயல் தொடர்பாக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. புயல் காரணமாக எவரும் அச்சம் அடையாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாக்கலாம், இழப்புகளையும் தவிர்க்கலாம்.

இயற்கையால் சில சமயங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதனை நாம் சமாளிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கும் போது பயத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.

புயல் தீவிரமடையும் என்பதால் அதி தீவிர புயலில் இருந்து பாதுகாப்பதன் அவசியத்தை கவனத்தில் கொண்டு நாமெல்லாம் அரசு எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு துணை நின்று, அரசின் விதிமுறைகளை பின்பற்றி, முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு புயலைக் கடந்து செல்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News