ஆன்மிகம்

விவிலிய நூல்கள் ஒரு அறிமுகம்

Published On 2019-01-08 03:19 GMT   |   Update On 2019-01-08 03:19 GMT
பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம்.
பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம். மீனவர்கள், மேய்ப்பர்கள் முதல் கவிஞர்கள், அரசர்கள் வரை இந்த நூல்களின் ஆசிரியர்களாக உள்ளனர்.

இந்த நூல்களெல்லாம் தூய ஆவியானவரின் ஏவுதலால், வழிகாட்டுதலால் எழுதப்பட்டது என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை. விவிலியம் சொல்வதும் அது தான்.

‘பிப்லோஸ்’ என்னும் கிரேக்கச் சொல் மருவி ‘பிப்ளியோன்’ என்றானது. இதற்கு புத்தகம் என்பது பொருள். இது தான் ‘பைபிள்’ என்றானது.

விவிலியம் தன்னை இரண்டாகப் பிரித்துக்கொள்கிறது. ஒன்று ‘பழைய ஏற்பாடு’. இன்னொன்று ‘புதிய ஏற்பாடு’.

‘ஏற்பாடு’ என்பது உடன்படிக்கை.

‘பழைய ஏற்பாடு’ ஆதி மனிதன் ஆதாமின் பிறப்பு முதல் இயேசு வின் பிறப்புக்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாற்றை, குறிப்பாக இறைவாக்கினர்களின் வரலாற்றை, இஸ்ரயேல் குல மக்களின் வாழ்க்கை முறையை விளக்குகிறது.

‘புதிய ஏற்பாடு’ இயேசுவின் பிறப்பு முதல் அவருடைய அப்போஸ்தலர்களின் ஆதி கால கிறிஸ்தவ மறை பரப்புதல் பணி வரை நீடிக்கிறது.

பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 நூல்களும், இணை திருமறையில் 7 நூல்களும் உள்ளன. இந்த எழுபத்து மூன்று நூல்களின் தொகுப்பே திருவிவிலியம்.

கி.மு. 750-ல் எழுதப்பட்ட ஆமோஸ் இறைவாக்கினரின் நூலே விவிலியத்திலேயே முதலில் எழுதப்பட்ட நூல். மற்ற நூல்கள் எல்லாம் அதன் பின்னரே எழுதப்பட்டன.

காலம் காலமாக வாய்வழிக் கதைகளாகவும், பரம்பரையினரின் சிறு சிறு குறிப்புகளாகவும், படங்களாகவும் இருந்த பழைய ஏற்பாட்டுக் கதைகள், பாடல்கள் எல்லாம் பிற்காலத்தில் தான் எழுத்து வடிவம் பெற்றன.

கி.மு. 1300-ம் ஆண்டு முதல், கி.பி. 100-ம் ஆண்டு வரை உருவான படைப்புகள் திரு விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கணக்கு.

இப்போது காணப்படும் விவிலியத்தின் வடிவம் ஆரம்ப காலத்தில் இல்லை. கி.பி. 1440-ல் இராபி நாத்தான் என்பவர் பழைய ஏற்பாட்டு நூலை ஆராய்ந்து அவற்றை அதிகாரம், வசனங்களாகப் பிரித்தார். இது வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கோடிடவும் மிகவும் வசதியாக இருந்தது.

புதிய ஏற்பாட்டு வசனங்கள் கி.பி. 1550-ல் பிரிக்கப்பட்டன. ஏற்கனவே புதிய ஏற்பாட்டு அதிகாரங்களை பேராயர் ஸ்டீவ் லாங்டன் 1216-ல் பிரித்திருந்தார்.

களிமண், ஓடுகள், பாப்பிரஸ் தாள்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவற்றில் மூல செய்திகள் எழுதப்பட்டிருந்தன.

சீனாய்ச் சுவடி, வத்திக்கான் சுவடி இரண்டும் கி.பி. 350-ல் கண்டெடுக்கப்பட்டன.

யூதேயா பாலை நிலப்பகுதியில் கி.பி 1947-ம் ஆண்டு பல ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

பழைய ஏற்பாட்டின் 180 ஏடுகளும், எசேயா இறைவாக்கினர் நூலின் முழு வடிவமும் இங்கே களிமண் ஜாடிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இவை மும்ரான் குகைகளில் வாழ்ந்த எசேனியர் களால் பாதுகாத்து வைக்கப்பட்டவையாகும்.

பழைய ஏற்பாடு பெரும்பாலும் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. பின்னர் இந்த நூல்கள் கிரேக்கத்திலும் மொழி பெயர்க்கப்பட்டன. புதிய ஏற்பாடு நூல் முழுவதும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.

புனித ஜெரோம் முழு திரு விவிலியத்தையும் லத்தீனில் மொழிபெயர்த்தார். இது ஒரு மிகப்பெரிய பணி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் திருச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப்பட்டு வந்தது. லத்தீன் மொழியிலிருந்தே திருவிவிலியம் பல மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

1450-ம் ஆண்டு விவிலியம் முதன் முதலில் அச்சிடப்பட்டது. அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த கூடன்பர்க் முதலில் அச்சடித்த நூல் விவிலியம் தான்.

சீகன்பால்கு 1715-ம் ஆண்டு திருவிவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அது தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. ஆசியாவிலேயே முதலில் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது தமிழ் மொழியில் தான்.

அதன் பின்னர் 1727-ல் முழு விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது. தற்போது உலக மொழிகள் 1848-ல் திருவிவிலியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன‌. ஆண்டுக்கு சுமார் 10 கோடி விவிலியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

விவிலியத்தின் மையமான இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை மத்தேயு, மார்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேரும் எழுதியிருக்கிறார்கள். இவர்களில் மத்தேயுவும், யோவானும் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் செயல்களை மையமாய் வைத்து மார்குவும், போதனைகளை மையமாய் வைத்து மத்தேயு லூக்கா ஆகியோரும், இயேசுவின் இறை தன்மையை மையமாய் வைத்து யோவானும் நூல்களை ஆக்கியுள்ளனர்.

‘ஆதியிலே தேவன்’ என ஆரம்பித்து ‘ஆமென்’ என முடிகிறது பைபிள்.

சேவியர்
Tags:    

Similar News