செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அருகே கேரள கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

Published On 2021-10-15 08:59 GMT   |   Update On 2021-10-15 08:59 GMT
கேரள மாநிலம் கஞ்சிக்கோடு பகுதியில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக பெதப்பம்பட்டி சாலைக்கு வந்து விவசாய நிலத்தில் கழிவுகளை கொட்டியுள்ளனர்.
குடிமங்கலம்:

உடுமலை பகுதிகளில் பிரதான சாலைகள் மட்டுமன்றி கிராமங்களுக்கு செல்லும் சாலைகளிலும் கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகள் கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  

சம்பவத்தன்று சோமவாரபட்டி ஊராட்சி, பொட்டிநாயக்கனூர் பிரிவு அருகே விவசாய நிலம் மற்றும் சாலையோரத்தில் ரப்பர், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து ஊராட்சி நிர்வாகத்துக்கும், குடிமங்கலம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கேரள மாநிலம் கஞ்சிக்கோடு பகுதியில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக பெதப்பம்பட்டி சாலைக்கு வந்து விவசாய நிலத்தில் கழிவுகளை கொட்டியுள்ளனர்.

கேரளாவில் கழிவுகள் கொட்ட அனுமதியில்லாததால் அங்கு செல்லும் சில லாரி டிரைவர்கள் வாடகைக்கு ஆசைப்பட்டு அபாயகரமான கழிவுகளை ஏற்றி வந்து உடுமலை - ஆனைமலை ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோடு பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டி வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் போது சோதனை சாவடிகள் உள்ளன. அங்குள்ள அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தால் இதுபோல் கிராமப்பகுதிகள், விவசாய நிலங்களில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக கழிவுகள் கொட்டுவதை தடுக்க முடியும் என்றனர்.

கழிவுகளை கொட்ட வந்த காரைக்குடியை சேர்ந்த டிரைவர் கோபாலுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். குடிமங்கலம் போலீசார் கழிவுகளை கொட்டிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை எச்சரித்து அனுப்பினர்.
Tags:    

Similar News