செய்திகள்
கோப்புபடம்

நாட்டை கைப்பற்ற தலிபான்களுக்கு பாகிஸ்தான் உணவு, ஆயுத சப்ளை: ஆப்கானிஸ்தான் புகார்

Published On 2021-07-16 11:02 GMT   |   Update On 2021-07-16 11:02 GMT
அமெரிக்கா வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல இடங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.

காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து வந்த போதிலும் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.

அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க படைகள் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அமெரிக்க படை வாபஸ் பெறப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்குள் முழு படையும் வெளியேறி விடும்.

அமெரிக்கா வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல இடங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.

இதுவரை நாட்டில் 85 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகிறார்கள். ஆனால் மொத்தமுள்ள 400 மாவட்டத்தில் 3-ல் ஒரு பகுதி மட்டுமே தலிபான்களிடம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆங்காங்கே அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே தலிபான்கள் நாட்டை முழுமையாக கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் உதவி வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுக்கு ஆயுத உதவி, உணவு, வழிகாட்டு தகவல்கள் போன்றவற்றை வழங்கி வருவதாகவும், பாகிஸ்தானின் விமானப்படை தலிபான்களுக்கு உதவு வதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி இருக்கிறது.

Tags:    

Similar News