செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

20, 21-ந் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

Published On 2021-01-18 01:32 GMT   |   Update On 2021-01-18 01:32 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கு அவர், 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
சென்னை:

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த மாதமே தொடங்கிவிட்டார். தற்போது அவர், மாவட்ட வாரியாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சாலை மார்க்கமாக திறந்தவேனில் சென்றும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 'இரட்டை இலை' சின்னத்துக்கு வாக்குகள் திரட்டி வருகிறார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அவருடைய பிரசார பயண விவரம் வருமாறு:-

20-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணியளவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர், கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்குகிறார்.

காலை 9.45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம் அருகே நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். காலை 11.30 மணிக்கு வாலாஜாபாத் பஸ்நிலையத்துக்கு சென்று வாக்கு சேகரிக்கிறார். பின்னர் அவர் மதியம் 12.30 மணியளவில் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். மதியம் 1 மணியளவில் தேரடி காந்தி சாலையில் பிரசாரம் செய்கிறார். மதியம் 1.45 மணிக்கு காஞ்சிபுரம் ஜி.ஆர்.டி. ரீஜென்சி ஓட்டலில் நெசவாளர்கள், சிறுவணிகர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். மாலை 4.15 மணியளவில் உத்திரமேரூர் பஸ்நிலையம் அருகே விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை சந்திக்கிறார்.

மாலை 5.30 மணியளவில் செங்கல்பட்டு பஸ் டிப்போ முதல் செங்கல்பட்டு போலீஸ்நிலையம் வரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலை மார்க்கமாக பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் அவர், அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இரவு 7 மணியளவில் சிங்கபெருமாள் கோவில் கே.ஆர்.ஜி. திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவு 8 மணியளவில் சிங்கபெருமாள்கோவிலில் உள்ள பார்ச்சூன் ஓட்டலில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

21-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பஸ்நிலையம் அருகே நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.

காலை 10.30 மணிக்கு புதுப்பட்டினம் குப்பம் பகுதியில் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். காலை 11.45 மணியளவில் அவர், செய்யூர் பஸ்நிலையம் சென்றடைகிறார்.

மதியம் 2.15 மணியளவில் மதுராந்தகம் பஸ்நிலையம் தேரடியில் கரும்பு, பருத்தி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் அவர், தாம்பரம் சந்திப்பு முதல் சண்முகம் சாலை வரையில் சாலைமார்க்கமாக பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் அவர், அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மாலை 5.45 மணிக்கு பல்லாவரத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News