செய்திகள்

இந்திய வீரர்களின் தியாகத்தை இழிப்படுத்துவதா? - ராகுல் மீது அமித் ஷா பாய்ச்சல்

Published On 2019-03-23 11:41 GMT   |   Update On 2019-03-23 11:41 GMT
ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்திய வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் கட்சியினர் இழிப்படுத்தி வருவதாக பாஜக தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். #AmitShah #soildersmartyrdom
புதுடெல்லி:

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலை சந்தேகிக்கும் வகையில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த அமித் ஷா, தேர்தல் காலங்களில் இதுபோன்ற ஓட்டுவங்கி அரசியலில் காங்கிரசார் ஈடுபடுவது வாடிக்கைதான் என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

ஆனால், ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர்கள் நமது இந்திய வீரர்களின் தியாகத்தை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை அனுமதிப்பது சரியல்ல எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான  சாம் பிட்ரோடா சமீபத்தில் இந்த தாக்குதல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, நமது நாட்டில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் அந்நாட்டின் ராணுவத்துக்கும் தொடர்பு இல்லை என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறதா? என்று ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்துக்கும் தேசியவாதத்துக்கும் இடையில் முடிவெடுக்க இயலாமல் தவிக்கும் காங்கிரசார் தேர்தல் காலங்களில் சமரச அரசியல் மற்றும் ஓட்டுவங்கி அரசியலில் ஈடுபடுவது வாடிக்கைதான். ஆனால், இத்தகைய அரசியல் தேசநலனை விட்டுக்கொடுத்து, இந்திய வீரர்களின் தியாகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அவர்களின் ரத்தத்தின்மீது நடத்தப்பட வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டை முன்னர் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது பயங்கரவாதத்துக்கு எதிராக திடமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சோனியா, மன்மோகன் சிங் தலைமையிலான பத்தாண்டு ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான துணிச்சல் அவர்களுக்கு இல்லாமல் போனதுதான் காரணம்.

ஆனால், மோடி தலைமையிலான இந்த ஆட்சியில் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என்ற தீர்மானத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தானின் சதிச்செயல்களுக்கும் சரியான பதிலடி கொடுத்து நாட்டை பாதுகாக்க பாஜக அரசால்தான் முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன் எனவும் அவர் கூறினார். #AmitShah #soildersmartyrdom 
Tags:    

Similar News