செய்திகள்
சீன அதிபர் ஜின்பிங்

அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் - ராணுவ சட்டத்தில் திருத்தம் அமல்

Published On 2021-01-03 20:24 GMT   |   Update On 2021-01-03 20:24 GMT
அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அந்த நாட்டின் ராணுவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீஜிங்:

சீனாவில் அதிபர் ஜின்பிங் (வயது 67) அதிகாரம் கொடி கட்டிப்பறக்கிறது.

அவர் நாட்டின் அதிபர் என்பதோடு மாசேதுங்குக்கு பிறகு சீன கம்யூனிஸ்டு கட்சியின் வலிமை வாய்ந்த தலைவராக திகழ்கிறார். கட்சியன் பொதுச்செயலாளர் பதவியையும் வகிக்கிறார். ராணுவத்துக்கு அவர்தான் தலைவர். இவை அனைத்தும் அவர் வாழ்நாள் முழுவதும் பதவி வகிக்க துணை நிற்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் ஜின்பிங் தலைமையில் இயங்கும் சீன ராணுவத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் அங்கு ராணுவ சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தங்கள் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என ஹாங்காங்கில் இருந்து வெளிவருகிற ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 26-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்துக்கு சமமாக சீன ராணுவத்தை 2027-ம் ஆண்டுக்குள் அதிநவீனமாக கட்டமைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் முடிவு எடுத்த நிலையில், இந்த சட்ட திருத்தங்கள் கொண்டு வந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சட்ட திருத்தங்கள், ராணுவ கொள்கையை வகுப்பதில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் பிரதமர் லீ கெகியாங் தலைமையிலான நாட்டின் மந்திரிசபையின் பங்களிப்பை பலவீனப்படுத்துகிறது.

இந்த அதிகாரம், மத்திய ராணுவ ஆணையத்துக்கு செல்கிறது. இந்த ஆணையம்தான், ஜின்பிங் தலைமையிலான 20 லட்சம் படை வீரர்களை கொண்ட சீன ராணுவத்தின் ஒட்டுமொத்த கட்டளை மையம் என்பதும், இதன் ஒரே சிவில் தலைவர் ஜின்பிங் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்ட திருத்தங்கள், ஜின்பிங் தலைமையில் நாட்டின் ராணுவ தலைமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று ராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், புதிய ராணுவ தொழில் நுட்பங்கள், இணைய பாதுகாப்பு, விண்வெளி, மின் காந்தவியல் ஆகியவற்றின் ஆராய்ச்சியில் பங்கேற்பதற்கு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும், தனியார் நிறுவனங்களையும் அணி திரட்டுவதற்கான நாடு தழுவிய ஒருங்கிணைப்பு முறையை உருவாக்குவதின் அவசியத்தை புதிய சட்ட திருத்தங்கள் வலியுறுத்துகின்றன.
Tags:    

Similar News