செய்திகள்
கோர்ட்டு தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் கனடாவை சேர்ந்தவருக்கு மரண தண்டனை

Published On 2020-08-07 22:10 GMT   |   Update On 2020-08-07 22:10 GMT
சீனாவில் போதைப்பொருள் வழக்கில் கனடாவை சேர்ந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவின் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோவை கடந்த 2018-ம் ஆண்டு கனடா கைது செய்தது. இந்த விவகாரம் சீனா மற்றும் கனடா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

கனடாவை பழிதீர்க்கும் விதமாக சீனாவில் குற்ற வழக்குகளில் கைதான கனடாவைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளை சீன அரசு தீவிரப்படுத்தியது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கனடாவைச் சேர்ந்த 3 பேருக்கு சீனா மரண தண்டனை விதித்து அதனை நிறைவேற்றியும் உள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கனடா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது கனடாவைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு போதைப்பொருள் வழக்கில் சீனா மரண தண்டனை விதித்துள்ளது.

யே ஜியான்ஹுய் என்கிற கனடா நாட்டைச் சேர்ந்த நபர் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் போதைப் பொருளை தயாரித்து கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு குவாங்டாங் மாகாண கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் யே ஜியான்ஹுய் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சீனர் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர்த்து மேலும் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News