செய்திகள்
மில்லில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்த காட்சி.

ஈரோட்டில் இன்று அதிகாலை மில்லில் தீ விபத்து

Published On 2021-09-25 08:30 GMT   |   Update On 2021-09-25 08:30 GMT
ஈரோட்டில் இன்று அதிகாலை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு பி.பி.அக்ர ஹாரம் பகுதியில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சைசிங் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் சுழற்சி முறையில் நாள் தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த மில் குடோனில் நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள், துணி பேனல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் குடோனில் வைக்கப்பட்டிருந்த நூல் பண்டல்களில் இருந்து திடீரென கரும் புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

அப்போது பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடிய வில்லை. இதையடுத்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் மேற்பார்வையில், நிலைய அலுவலர் முத்து குமாரசாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும் மில்லில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள், துணி பேனல்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் சேதம் மதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். அதிகாலை விபத்து ஏற்பட்டதால் குறைந்த அளவே பணியாளர்கள் இருந்தனர். இதனால் பெரும் விபத்து, உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

மேலும் இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News