செய்திகள்
ஆலங்குடி பகுதியில் மரங்களில் காய்ந்து தொங்கும் பலாப்பழங்கள்.

ஆலங்குடி பகுதியில் பலா மரங்களை அடமானம் வைத்து பணம் பெற்றதால் விவசாயிகள் கவலை

Published On 2021-04-08 10:22 GMT   |   Update On 2021-04-08 10:22 GMT
ஆலங்குடி பகுதியில் பலாப்பழம் விற்பனை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பலாப்பழங்கள் மிகவும் சுவை மிகுந்ததாக இருப்பதால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வியாபாரிகளால் விரும்பி வாங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் பலாப் பழங்களை வாங்குவோர் இன்றி மரங்களிலேயே பழுத்து வீணாகியது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டும் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்களிடம் இருந்த பலாமரங்களை குத்தகை மற்றும் ஒட்டு மொத்தமாக வியாபாரிகளிடம் கொடுத்து பணம் வாங்கி தங்களது சிறு, சிறு தேவைகளை விவசாயிகள் நிவர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பலா மரங்களை குத்தகைக்கு விட்டதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல தங்களது பலா மரங்களில் இருந்து தாங்களே பலாப்பழங்களை ருசிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

பெரும்பாலான பல மரங்களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளதால் இப்பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளுக்கு குறைந்த அளவிலான பலாப்பலங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் விற்பனையும் சற்று மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் குத்தகை வியாபாரிகள் பலாப்பழங்களை மொத்தமாக பறித்து வெளியூர்களுக்கு கொண்டு சென்று விடுகின்றனர்.

இதற்கிடையே நாள்தோறும் பழங்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தமிழ் வருடப்பிறப்பு மாதமான சித்திரை மாதம் பிறக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அப்போது முதல் பலாப்பழ விற்பனை சூடுபிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News