செய்திகள்
துப்பாக்கியுடன் பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் (கோப்பு படம்)

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் ஆயுத உதவி கேட்ட பெலாரஸ் அதிபர்

Published On 2020-09-17 00:22 GMT   |   Update On 2020-09-17 00:22 GMT
உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷிய அதிபரிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
மின்ஸ்க்:

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் 
நடைபெற்றது. 

அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல்
ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை எனவும் அதிபர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. 

இந்த போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

ஆனால், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் அனைத்தும் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சூழ்ச்சியே காரணம் என அதிபர் அலெக்ஸ்சான்டர் குற்றம் சுமத்தி வருகிறார். 

மேலும், தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா தலைமையிலான நோட்டோ படைகள் பெலாரஸ் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதற்கிடையில், உள்நாட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் கடந்த 15 ஆம் தேதி பெலாரஸ் அதிபர் ரஷியா பயணம் மேற்கொண்டார். அங்கு மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை அலெக்ஸ்சாண்டர் சந்தித்தார். 

4 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பொலாரசில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாகவும் ரஷியா உதவவேண்டும் எனவும் அதிபர் புதினிடம் அலெக்ஸ்சாண்டர் வேண்டுகோள் விடுத்தார். 

இதையடுத்து, பெலாரசின் பொருளாதார பிரச்சனைகளை சரிகட்ட உடனடியாக 1.5  பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்குவதாக ரஷிய அதிபர் புதின் உறுதியளித்தார்.

ஆனால், இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு தொடர்பாகவும் ஆயுதங்கள் தொடர்பாகவும் ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டனவா? என்ற தகவல் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதினிடம் தான் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் இன்று அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அதிபர் அலெக்ஸ்சாண்டர் கூறுகையில்,’ நாம் பெலாரஸ் நாட்டிற்குள் மட்டுமல்லாமல் எல்லைப்பகுதியிலும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நான் ரஷிய அதிபர் புதினிடம் சில புது வகையான ஆயுதங்களை கேட்டுள்ளேன். 

ரஷியாவும், பெலாரசும் இணைந்து ராணுவ ஒத்திகைகளை மேற்கொண்டு வருகிறது. இது போன்ற ராணுவ ஒத்திகைகளை இரு நாடுகளும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்’ என்றார். 

ரஷிய அதிபர் புதினிடம் எந்த வகையான ஆயுதங்களை உதவியாக கேட்டுள்ளார் என்ற தகவலை பெலாரஸ் அதிபர் தெரிவிக்கவில்லை.

Tags:    

Similar News