லைஃப்ஸ்டைல்
பெண்களிடம் ‘புகை’யும், புதுப்பழக்கம்

பெண்களிடம் ‘புகை’யும், புதுப்பழக்கம்

Published On 2019-10-05 05:15 GMT   |   Update On 2019-10-05 05:15 GMT
பெண்களிடம் மெதுவாக புகைய ஆரம்பித்து, இன்று பெரும் மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கும் புகைப்பழக்கத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
மேலை நாட்டு கலாசாரம், நம் இந்தியாவிலும் பரவி கிடக்கிறது. ஐ.டி. துறையின் வளர்ச்சி என்பதை மட்டுமே இதற்கு காரணமாக்கிவிட முடியாது. இந்தியர்கள் மேலை நாடுகளில் கல்வி பயில்வதும், மேலை நாட்டு திரைப்படங்களை விரும்பி பார்ப்பதும் இதற்கு முக்கிய காரணமாகின்றன. இப்படி மேலை நாட்டு கலாசாரங்களால் ஈர்க்கப்படும் இந்தியர்கள், அதை வெகு விரைவிலேயே பின்பற்ற தொடங்கிவிடுகின்றனர்.

பீட்சா, பர்கர், கபாப் போன்ற உணவு பழக்கமும், அரைகுறை ஆடை டிரெண்டிங்கும், ‘லிவ்விங் டூ கெதர்’ கலாசாரமும் இந்தியாவில் அப்படி பிரபலமானதுதான். இவற்றுடன் தற்போது ‘சோசியல் டிரிங்கிங்’, ‘சோசியல் ஸ்மோக்கிங்’ போன்ற பழக்கங்களும் இணைந்துவிட்டன. அதாவது அலுவலக நண்பர்களின் நிர்ப்பந்தத்தினால் புகைப்பிடிப்பது, கொண்டாட்டங்களின் போது நண்பர்களின் மனதிருப்திக்காக மது அருந்துவது என நம்மை சுற்றியிருக்கும் சமூகத்திற்குள் புதுப்புது பழக்கங்கள் தலைதூக்கிக்கொண்டிருக்கின்றன. இவை நவீன பெண்கள் மனதில் குடியேறியிருப்பதுதான், வேடிக்கையான உண்மை.

ஆம்...! சமீபகாலமாக இந்திய பெண்களிடம் ‘சிகரெட் பழக்கம்’ அதிகரித்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, இந்திய ஆண்களும், பெண்களும், புகைப்பழக்கத்தில் சம உரிமையை வெகுவிரைவில் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில், கடந்த 10 வருடங்களில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்தும், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

பெண்களிடம் மெதுவாக புகைய ஆரம்பித்து, இன்று பெரும் மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கும் புகைப்பழக்கத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.

எதற்காக பெண்கள் சிகரெட் புகைக்கிறார்கள்

இதன் காரணம் குறித்து அறிய பல நாடுகளில், பல அமைப்பு களின் மூலம் பலவிதமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஆண்களுக்கு இணையாக தங்களை காட்டி கொள்வதற்கும், அலுவலக வேலையில் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கவும், சமூக பார்வைக்காக தொடங்கி நாளடைவில் அதற்கு அடிமையாவதாகவும் அதிகபடியான பெண்களின் பதிலாக அமைந்திருக்கிறது. இந்திய பெண்களிடம் நடத்திய ஆய்விலும் இத்தகைய பதில்களே கிடைத்திருக்கின்றன.

சிகரெட் பழக்கம் இந்தியாவில் பரவியது எப்படி

2012-ம் ஆண்டிலிருந்துதான், இந்திய பெண்களிடம் புகைப்பழக்கம் வேகமாக பரவியிருக்கிறது. அதுவரை அங்கொன்றும், இங்கொன்றுமாய் இலை மறை காயாக சமூகத்தில் இருந்து வந்த பழக்கம், ஐ.டி. மோகத்தினால் பூதாகரமாக வெடித்தது. ஐ.டி. அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ‘ஸ்மோக்கிங் ஏரியா’வில் புகைப்பழக்கத்தை தொடங்கி, இன்று கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களிலேயே தைரியமாக சிகரெட்டை பற்ற வைக்கிறார்கள்.

‘சோசியல் ஸ்மோக்கிங்’ என்றால் என்ன

இந்திய பெண்களிடம் வேகமாக பரவி வருவது, ‘சோசியல் ஸ்மோக்கிங்’தான். அதாவது புகைப்பழக்கம் இருக்கும் உயரதிகாரிகளின் முன்னிலையில், மரியாதை நிமித்தமாக புகைப்பிடிப்பதும், நண்பர்களின் மதுவிருந்து கொண்டாட்டங்களின்போது அவர்களுக்காக புகைப்பிடிப்பதுமே சோசியல் ஸ்மோக்கிங். இந்த பழக்கம்தான், இந்திய பெண்களின் உதட்டில் சிகரெட்டை பற்ற வைத்தது. சோசியல் ஸ்மோக்கிங் என்ற பெயரில் மெதுவாக புகைய ஆரம்பித்து, இன்று ‘கேசுவல் ஸ்மோக்கிங்’காக கொழுந்துவிட்டு எரிகிறது.

சிகரெட் புகைமூட்டத்தில் மெட்ரோ நகரங்கள்


இந்தியாவின் மற்ற நகரங்களைவிட, மெட்ரோ நகரங்கள் என அழைக்கப்படும் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை போன்ற பகுதிகளில்தான், பெண்கள் அதிகளவில் புகைக்கிறார்கள். ஏனெனில் மெட்ரோ நகரங்களில்தான், அதிகளவிலான ஐ.டி.நிறுவனங்கள் இயங்குகின்றன. ஐ.டி.தாக்கத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம் என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில்....

கடந்த 10 ஆண்டுகளில் சிகரெட் பழக்கம் ஆண்களிடம் குறைந்தும், பெண்களிடம் அதிகரித்தும் காணப்படுகிறது. இதற்கு புகைப்பழக்கத்தால் நோய் தாக்குதலுக்கு ஆளான பெண்களே சாட்சியம் பகிர்கின்றனர்.

எலக்ட்ரானிக் சிகரெட், ஹுக்கா

நவீன பெண்கள் சிலர், விதவிதமான சிகரெட்டுகளை மட்டுமின்றி, எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் ஈ சிகரெட்டையும் பயன்படுத்துகிறார்கள். சிலர் அரபு நாடுகளில் பிரபலமான ஹுக்காவையும் புகைக்கிறார்கள். எலக்ட்ரானிக் சிகரெட் மற்றும் ஹுக்கா இவை இரண்டுமே, நமக்கு வேண்டிய வாசனைகளில், பிளேவர்களில் புகைக்கமுடியும் என்பதால், இவை நவீன பெண்களின் தேர்வாக இருக்கிறது.

வேப்பிங் மோகம்


உலகளவில், புகைப்பிடிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் ‘வேப்பிங்’ பழக்கத்தினால், புகைப்பிடிக்க ஆரம்பித்தவர்களாகவே இருப்பர்.

வேப்பிங் என்பது, மேலை நாட்டு கலாசாரம். அதாவது எலக்ட்ரானிக் சிகரெட்டை கொண்டு உருவாகும் புகையை, பலவிதமான வடிவங்களில் வெளியிடுவதைதான் வேப்பிங் என்கிறார்கள்.

வட்டமாக புகைவிடுதல், வட்டத்திற்குள் வட்டமாக புகைவிடுதல், புதுமையான வடிவங்களை உருவாக்குவது... என வேப்பிங் கலையில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தாக்கத்தினாலும், பெண்களின் சிகரெட் பழக்கம் நாளுக்கு நாள் கூடிவருகிறது.
Tags:    

Similar News