செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பிலிப்பைன்ஸ், ஜப்பான் பயணம்

Published On 2019-10-16 17:08 GMT   |   Update On 2019-10-16 17:08 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக நாளை முதல் அக்டோபர் 23-தேதி வரை பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்ல உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (அக்டோபர் 17) முதல் 23 வரை அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்ல உள்ளார். தனது பயணத்தின் முதல் நாடாக அக்டோபர் 17 முதல் 21 வரை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்கிறார். 

அங்கு பிலிப்பைன்ஸ் அதிபரை சந்திக்கும் ராம்நாத் கோவிந்த் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அந்நாட்டின் மிரிரம் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி அங்கு அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்துவைக்கிறார். இதைதொடர்ந்து, பிலிப்பைன்ஸ் வாழ் இந்தியர்களிடம் உரையாடுகிறார். 

தனது 5 நாள் பிலிப்பைன்ஸ் பயணத்தை 21-ம் தேதி நிறைவு செய்யும் ஜனாதிபதி அங்கிருந்து ஜப்பான் செல்கிறார். ஜப்பானில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பேரரசன் நருகிடோ மற்றும் பேரரசி மசகோவின் சிம்மாசன விழாவில் விருந்தினராக பங்கேற்கிறார்.

இதையடுத்து, டோக்கியோவில் உள்ள புத்த கோவிலுக்கு செல்லும் ஜனாதிபதி அங்கு ஒரு போதி மரத்தையும் நட உள்ளார். பின்னர் தனது ஜப்பான் பயணத்தை அக்டோபர் 23-ம் தேதி முடித்துக்கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தியா திரும்புகிறார் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News