செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெலுங்குதேசம் கட்சி அறிவிப்பு

Published On 2018-03-16 06:39 GMT   |   Update On 2018-03-16 06:39 GMT
எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வருகிற 19-ந்தேதி தெலுங்கு தேசம் கட்சி பாராளுமன்றத்தில் கொண்டு வருகிறது. #TDPPullsOut
புதுடெல்லி:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக தெலுங்குதேசம் கட்சி கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறது.

ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு சமீபத்தில் திட்டவட்டமாக கூறி விட்டது. இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகும் முடிவை தெலுங்குதேசம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்குதேசம் முடிவு செய்தது. இதற்கான மனுவை இன்று சபாநாயகரிடம் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் கொடுத்தனர்.

பொதுவாக ஒரு கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதற்கு 50 எம்.பி.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். 50 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் தான் அந்த தீர்மானம் சபாநாயகரால் ஏற்றுக் கொள்ளப்படும்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் ஒரு தடவை கூட எந்த கட்சியும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை. பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால் எந்த கட்சியும் அந்த முயற்சியில் இறங்கவில்லை.

தற்போது முதல் முறையாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு மறுப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சிக்கு சவாலாக விளங்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.


பாராளுமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்.பி.க்களே உள்ளனர். எனவே தாங்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்குமாறு இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அணுகியது.

காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் ஆதரவு பெற முடிவு செய்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து பேசினார்கள். மேலும் சிவசேனாவிடமும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டுள்ளது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளன. இதற்கிடையே அ.தி.மு.க.வையும் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க தயார் என்று நேற்று சந்திரபாபுநாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி அறிவித்தது. மாநில அரசியலில் எலியும் பூனையுமாக இருக்கும் தெலுங்குதேசமும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் இந்த வி‌ஷயத்தில் ஒன்று சேர்ந்திருப்பது பா.ஜ.க. தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதனால் சிறப்பு அந்தஸ்து பெற மத்திய அரசை எதிர்க்கும் வி‌ஷயத்தில் தெலுங்குதேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முடிவடைய உள்ளது. அதற்குள் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அளிக்காவிட்டால், ஏப்ரல் 6-ந்தேதி 9 எம்.பி.க்களையும் ராஜினாமா செய்ய வைக்க ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.

அப்படி அவர் அதிரடி முடிவு எடுத்தால், மக்கள் செல்வாக்கு அவருக்கு போய் விட கூடும் என்று பயப்படும் சந்திரபாபுநாயுடு, அதிரடியாக நடவடிக்கைகளில் ஈடுபடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாகத்தான் அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்து இருப்பதோடு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளார்.

தெலுங்குதேசம் கட்சி எம்.பி. தோட்டா நரசிம்மன் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் ஸ்ரீவத்சாவுக்கு அனுப்பி வைத்தார். இந்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவை பொறுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி கிடைக்குமா? என்று தெரிய வரும். என்றாலும் பாராளுமன்றத்தில் வரும் 19-ந்தேதி (திங்கட்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் தோட்டா நரசிம்மன், ரமேஷ், ரவீந்திரபாபு ஆகியோர் தெரிவித்தனர்.


தெலுங்குதேசம் கட்சியின் இந்த நடவடிக்கை பா.ஜ.க. அரசுக்கு திடீர் நெருக்கடியை கொடுத்துள்ளது.

2014-ம் ஆண்டு 282 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்த பா.ஜ.க. அடுத்தடுத்த தொடர் தோல்விகளால் 9 இடங்களை இழந்தது. இதனால் பாராளுமன்றத்தில் தற்போது பா.ஜ.க.வுக்கு 273 எம்.பி.க்கள் உள்ளனர்.

543 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துக்கு 273 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பா.ஜ.க.வுக்கு மிகச் சரியான தனிப்பெரும்பான்மை உள்ளது.

சில கூட்டணி கட்சிகளே பா.ஜ.க.வை ஆதரித்து வருகின்றன. கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த சிவசேனாவும், தெலுங்கு தேசமும் விலகி சென்றுள்ளன. இதனால் முக்கிய வி‌ஷயங்களில் பா.ஜ.க. தனித்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஆதரிக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பா.ஜ.க. அரசை தோற்கடிப்பது கடினம் என்பதால், இந்த கட்சிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. என்றாலும் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற தெலுங்கு தேசம் எம்.பி.க்களும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் போட்டி போட்டு மற்ற கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளர். “நாட்டை பேரழிவில் இருந்து காக்கும் தெலுங்குதேசத்தை வரவேற்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியதற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். #Tamilnews
Tags:    

Similar News