லைஃப்ஸ்டைல்
உருண்டை குழம்பு

குறைந்த நேரத்தில் ருசியான குழம்பு செய்யலாம் வாங்க

Published On 2021-02-24 10:26 GMT   |   Update On 2021-03-01 09:31 GMT
குறைந்த நேரத்தில் ருசியான குழம்பு செய்ய வேண்டுமா? அப்படினா பருப்பு உருண்டை குழம்பை செய்யலாம். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 1 கப்
துவரம்பருப்பு - கால் கப்
இஞ்சி - 1 துண்டு
மிளகு, சோம்பு, சீரகம் - சிறிதளவு
கசகசா - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கப்
தக்காளி, பெ.வெங்காயம் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
சாம்பார் வெங்காயம் - 10
கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

மிக்சியில் முதலில் இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் பருப்பு வகைகளை லேசாக அரைத்து, சிறிதளவு வெங்காயத்தையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி, கசகசா, மீதமிருக்கும் வெங்காயம், சோம்பு மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் அரைத்து வைத்த மசாலாக்களை கொட்டி வதக்கவேண்டும்.

பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

பச்சை வாசம் நீங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.

அதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்து வந்ததும் வேக வைத்துள்ள உருண்டைகளை போட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News