செய்திகள்
பாஜக

குண்டும் குழியுமான சாலைகளை கண்டித்து அந்தேரியில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம்

Published On 2021-10-04 03:56 GMT   |   Update On 2021-10-04 03:56 GMT
அந்தேரியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை:

மும்பையில் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமாக இருப்பதாக கூறி அந்தேரி கிழக்கு பகுதியில் நேற்று மாநகராட்சியை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் எம்.ஐ.டி.சி.- சீப்ஸ் செல்லும் ரோட்டில் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கு இருந்து அப்புறப்படுத்தினர்.

இந்தநிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. மேலும் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது என தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் கூறியுள்ளார். போலீசார் தாக்கியதில் 15 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு போலீசார் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. போராட்டக்காரர்கள் மீது தடியடி எதுவும் நடத்தப்படவில்லை என போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்வர் ரெட்டி கூறினார். இதற்கிடையே அந்தேரி எம்.ஐ.டி.சி. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதேபோல மோசமான சாலைகளை கண்டித்து மாநகராட்சி தலைமையகம் முன்பு பா.ஜனதா மூத்த தலைவர் ஆஷிஸ் செலார் தலைமையில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News