வழிபாடு
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

Published On 2022-04-09 07:51 GMT   |   Update On 2022-04-09 07:51 GMT
வருகிற 14-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடப்பதையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டனர்.
தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர்கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

குருபகவான் ஒரு முழு சுககிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்பதும், குரு பார்க்க தோஷம் விலகும் என்பதும் பழமொழிகள் ஆகும். மற்ற எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.

ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

இதையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்றுகாலை திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் முன்பு நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, பந்தக்காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மாவிலை, மலர்கள் கட்டப்பட்டன. பின்னர் குழிக்குள் நவதானியங்கள் போடப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் செயல்அலுவலர் தனலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குருப்பெயர்ச்சியையொட்டி வருகிற 24-ந் தேதி லட்சார்ச்சனையும், 29, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கம்புகள், இரும்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News