ஆன்மிகம்
வழிபாடு

கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு கிடையாது

Published On 2021-04-12 03:42 GMT   |   Update On 2021-04-12 03:42 GMT
கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் எதுவும் நடக்காது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டை தமிழகத்தில் கொண்டாடி வருகிறார்கள். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாக கருதப்படுகிறது.

புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

அந்தவகையில் வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) தமிழ்ப் புத்தாண்டான பிலவ ஆண்டு பிறக்கிறது. தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்து உள்ளதால் கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு கிடையாது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) பிறக்கும் பிளாவா புத்தாண்டை (யுகாதி) கொண்டாடுகின்றனர். வீடுகளை சுத்தம் செய்து காலையில் புத்தாடை அணிந்து பூஜை செய்த பின்னர் மாம்பழம், வேப்பிலை உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவை முதலில் உட்கொள்கின்றனர். பிறகு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.



அந்தவகையில் சென்னையில் தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடக்கிறது. காலை 8.30 மணி முதல் பக்தர்கள் அரசு பிறப்பித்துள்ள கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டு பிறப்பை யொட்டி வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது. கொரோனா நோய் பரவல் எதிரொலியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்கலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களும் அரசு விதித்து உள்ள கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி விஷூ பண்டிகையையொட்டி வழக்கமான பூஜை மட்டுமே நடத்தப்படுகிறது. அய்யப்பன், குருவாயூரப்பன் சாமிகளுக்கு கனி காணும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News