செய்திகள்
கோப்புபடம்

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை - நகர்நல அலுவலர் தகவல்

Published On 2021-09-13 07:24 GMT   |   Update On 2021-09-13 07:24 GMT
அனைத்து வார்டுகளிலும் சுகாதார ஊழியர்கள் காய்ச்சல் கண்டறியும் பணியில் வீடு வீடாக சென்று வருகின்றனர்.
திருப்பூர்:

தேவைப்பட்டால்  வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 3.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 75 சதவீத இலக்கு எட்டப்படும் நிலை உள்ளது. 

தற்போது 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உட்பட்ட தலா 2 மையங்கள் என தினமும் 34 மையங்களில் தடுப்பூசி முகாம்கள், தடுப்பூசி இருப்புக்கு ஏற்ப நடத்தப்படுகிறது. 

இது தவிர அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சிறப்பு மையங்களாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 9 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அவ்வகையில் தினமும் 15 ஆயிரம் பேர் என்ற அளவில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

அனைத்து வார்டுகளிலும் சுகாதார ஊழியர்கள் காய்ச்சல் கண்டறியும் பணியில் வீடு வீடாக சென்று வருகின்றனர்.

இப்பணியின் போது வீடுகளில் உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களும் தடுப்பூசி செலுத்திய விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.

இதனால் மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாதோர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. தேவை ஏற்படும் நிலையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News