செய்திகள்
ராஜேஷ் தோபே

மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று

Published On 2021-02-18 22:59 GMT   |   Update On 2021-02-18 22:59 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிராவில் படிப்படியாக தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், இந்த மாதம் முதல் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட இடத்தில் அது 2 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே இதை கட்டுப்படுத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் யவத்மால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் 10 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. அதே வேளையில் கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்களில் வழிபடவும், ஓட்டல்கள் செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல். அமராவதி மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

மகாராஷ்டிராவின் 2 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபேவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்தி கொண்ட அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News