செய்திகள்
தடுப்பூசி

கோவையில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

Published On 2021-06-25 04:48 GMT   |   Update On 2021-06-25 04:48 GMT
கோவை மாநகரில் உள்ள 5 மண்டலங்களிலும் 45 மையங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் ஆமை வேகத்திலேயே குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் பாதிப்பு பட்டியலில் தமிழகத்தில் கோவை முதலிடத்திலேயே தொடர்ந்து வருகிறது.

தொற்று பாதிப்பு அதிகரித்ததாலும், தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வருவதாலும், மக்கள் அனைவருமே தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரி, பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம், காரமடை, வால்பாறை உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த மையங்களில் தினமும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சுகாதாரத்துறையினர் டோக்கன் வினியோகிக்கின்றனர். அதன்மூலம் ஒரு நாளைக்கு 100 முதல் 200 பேர் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி செல்கிறார்கள். இப்படி டோக்கன் வினியோகிப்பதும் முறையாக நடப்பதில்லை என கூறி மக்கள் ஆங்காங்கே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது.

இதற்கிடையே கோவை மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

கோவை மாநகரில் ராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி, துடியலூர் வெள்ளகிணறு மாநகராட்சி துவக்கப்பள்ளி, சின்னவேடம்பட்டி மாநகராட்சி ஆரம்ப பள்ளி, பி.என்.பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்பட அனைத்து தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டுள்ளன.

மையங்களின் கதவு முன்பு அறிவிப்பு பலகையும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் இன்று தடுப்பூசி போடப்படுவதில்லை என எழுதப்பட்டுள்ளது.

இது தெரியாமல் இன்று அதிகாலை ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு வந்தனர். ஆனால் தடுப்பூசி மையம் மூடப்பட்டிருந்ததாலும், தடுப்பூசி போடவில்லை என்ற அறிவிப்பாலும் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் கூறியதாவது:-

கோவை மாநகரில் உள்ள 5 மண்டலங்களிலும் 45 மையங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுவரை மாநகர் பகுதிகளில் மட்டும் சுமார் 3½ லட்சம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

அரசிடம் இருந்து வந்த தடுப்பூசிகள் அனைத்தும் தீர்ந்து விட்டது. தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை. இதனால் இன்று ஒரு நாள் மாநகரில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் வந்துவிட்டால் நாளை வழக்கம் போல் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்றார்.

கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், கோவை மாவட்டத்தில் அரசு அறிவுறுத்தியபடி கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிர மாக நடந்து வருகிறது. அரசிடம் இருந்து வரும் தடுப்பூசிகள் அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு மாவட்டத்தில் உள்ள மையங்களில் செலுத்தப்பட்டு வந்தது.

இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 7½ லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கையிருப்பு இல்லாததால் இன்று தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் தடுப்பூசி மிச்சம் இருப்பதாக தகவல் வந்தது. அங்கு மட்டும் இன்று தடுப்பூசி போடும் பணி நடைபெறும். மற்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படாது என்றார்.

Tags:    

Similar News