செய்திகள்
அல் கர்கூத் பணிமனையில் படகு ஒன்று கடலில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படும் காட்சியை படத்தில் காணலாம்.

தனி நபர்களின் படகுகளை கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கும், கடலில் விடுவதற்கும் வசதி

Published On 2020-09-15 05:13 GMT   |   Update On 2020-09-15 05:13 GMT
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் அல் கர்கூத் பணிமனையில் தனிநபர் வைத்திருக்கும் படகுகளை கரைக்கு கொண்டு வரவும், கடலில் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாய்:

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கடல்சார் போக்குவரத்து பிரிவின் இயக்குனர் முகம்மது அபு பக்கர் அல் ஹாஷெமி கூறியதாவது:-

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் கடல்சார் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் படகுகள், மற்றும் தனியார் நிறுவன சுற்றுலா படகுகளின் பராமரிப்பிற்காக அல் கர்கூத் பகுதியில் பணிமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் பெரிய ரக படகுகள் பராமரிப்பிற்காக எடுத்து வரப்படுகிறது.

மேலும், டாக்கிங் மற்றும் அன் டாக்கிங் எனப்படும் பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்ற படகுகளை கடலில் விடுவதற்கும், பராமரிப்புக்கு வரும் படகுகளை கரைக்கு கொண்டு வருவதற்கும் சிறப்பு தொழில்நுட்ப எந்திரங்கள் உள்ளது. இதுவரை சாலை, போக்குவரத்து ஆணையம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சுற்றுலா படகுகளுக்கு மட்டும் இந்த சேவை இருந்து வந்தது.

தற்போது தனிநபர் வைத்துள்ள 65 அடி நீளமுள்ள படகுகளை கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கும், கடலில் விடுவதற்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதில் தனிநபர் வைத்துள்ள படகுகளை கரைக்கு மற்றும் கடலில் கொண்டு சேர்ப்பதற்கும் மட்டும் சேவை வழங்கப்பட்டுள்ளது. அந்த படகு தயாரிப்பு நிறுவனம் அல்லது உரிமையாளர் ஏற்கனவே தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களை அணுகி இந்த இடத்தில் வைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.

அல் கர்கூத் பணிமனையில் வாரந்தோறும் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை படகு உரிமையாளர்கள் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்கள் உதவியுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். கடலில் இருந்து கரைக்கு கொண்டு வருவது மற்றும் கடலில் படகை விடும் சேவை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News