செய்திகள்
அணைமேடு அருவிக்கு செல்லும் பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள காட்சி.

சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு- அணைமேடு செல்ல பொதுமக்களுக்கு தடை

Published On 2021-11-23 03:56 GMT   |   Update On 2021-11-23 03:56 GMT
தற்போது தொடர் மழை காரணமாக அணைமேடு கலுங்கு பகுதியில் கடந்த 2 மாதங்களாக நீர் அருவி போல் கொட்டிவருகிறது.
தாரமங்கலம்:

தாரமங்கலம் பகுதியில் கடந்த சிலநாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள அணைமேடு நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் கொட்டுகிறது.

இந்த நீர்வீழ்ச்சியில் கரைகள் சேதம் அடைந்து விடுவதை தவிர்க்க கலுங்கு எனப்படும் தடுப்புச்சுவர் கற்களால் ஆன கரை அணை மேடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

வெள்ளப்பெருக்கின் போது இந்த கலுங்கின் வழியாக நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. அவ்வாறு கொட்டும் தண்ணீர் சிறிது தூரம் கிளை ஆறாக பெருக்கெடுத்து சென்று மீண்டும் சரபங்கா நதியில் கலக்கும் வகையில் பண்டைய காலத்தில் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது.

தற்போது தொடர் மழை காரணமாக அணைமேடு கலுங்கு பகுதியில் கடந்த 2 மாதங்களாக நீர் அருவி போல் கொட்டிவருகிறது. இந்த காட்சியை கண்டு ரசிக்கவும் குளித்து மகிழவும் மக்கள் குடும்பம் குடும்பமாக படை எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருவாரகாலமாக தண்ணீர் அதிக அளவில் கொட்டி வருவதால் குளிக்கும் போது 10-க்கும் மேற்பட்ட நபர்கள் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் அசம்பாவிதம் ஏற்படாவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து சேலம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் உத்தரவின்படி அணைமேடு நீர்வீழ்ச்சியில் குளிக்க, செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்விழ்ச்சிக்கு செல்லும் அனைத்து பகுதிகளையும் தடுப்பு அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் நீர்விழ்ச்சியில் குளிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Tags:    

Similar News