செய்திகள்
ஆர்யன் கான்

சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்

Published On 2021-10-16 02:53 GMT   |   Update On 2021-10-16 02:53 GMT
ஆர்யன்கான் தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரி கானுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டார். ஆர்யன் கானுக்கு விசாரணை கைதிகளுக்கான அடையாள எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
மும்பை :

இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (வயது 23). மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த 3-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மறுத்து விட்டது. தற்போது அவர் தரப்பில் போதைப்பொருள் தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனு மீதான விசாரணையின்போது, ஜாமீன் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு நீதிபதிதள்ளிவைத்தார்.

இதற்கிடையே சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு உள்ள ஆர்யன் கானுக்கு அவரது தாய் கவுரிகான் வீட்டில் இருந்து உணவு சமைத்து கொண்டு சென்றார். ஆனால் சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் ஜெயிலில் உள்ள கேண்டீனில் செலவழிப்பதற்காக மகன் ஆர்யன் கானுக்கு அவரது தந்தை ஷாருக்கான் ரூ.4 ஆயிரத்து 500 மணிஆர்டர் அனுப்பி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஷாருக்கான் சிறையில் இருக்கும் மகனிடம் வீடியோ காலில் உருக்கமாக பேசிய தகவலும் தெரியவந்தது.



இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு நிதின் வேச்சல் கூறியதாவது:-

சிறை கைதிகளுக்கு அதிகபட்சம் ரூ.4 ஆயிரத்து 500 மணி ஆர்டர் அனுப்ப விதிமுறை உள்ளது. அதன் அடிப்படையில் ஆர்யன்கானுக்கு அந்த தொகையை ஷாருக்கான் அனுப்பி உள்ளார். கடந்த திங்கட்கிழமை அவருக்கு அந்த பணம் கிடைத்தது. வெளியில் இருந்து உணவு கொடுக்க அவருக்கு அனுமதி இல்லை. ஜெயிலில் தரமான உணவு வழங்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கைதிகளை குடும்பத்தினா் யாரும் நேரடியாக பார்க்க முடியாது. விசாரணை கைதிகள் வாரத்திற்கு ஒன்று அல்லது 2 முறை குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் ஆர்யன் கான்
தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரி கானுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டார். இதேபோல ஆர்யன் கானுக்கு விசாரணை கைதிகளுக்கான அடையாள எண்ணும் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags:    

Similar News