ஆன்மிகம்
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்

Published On 2021-01-21 07:00 GMT   |   Update On 2021-01-21 07:00 GMT
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் தை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

நேற்று காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தது. இதில் தந்திரி நீலகண்டன் நாராயணன் பட்டத்ரி பங்கேற்று கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயசந்திரன், ஸ்ரீகாரியம் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாலையில் திருவிளக்கு ஏற்றுதல், ஆன்மிக சொற்பொழிவு, சிறப்பு பரத நாட்டியம் ஆகியவை நடந்தன. இரவில் பு‌‌ஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளினார்.

விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு பு‌‌ஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், மாலை 5.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 6.35 மணிக்கு கதாகாலசேபம், இரவு 7 மணிக்கு மண்டகப்படி, 8.15 மணிக்கு சொல்லரங்கம் ஆகியவை நடக்கின்றன. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொம்மண்டை அம்மன் சாமி எழுந்தருளல், 6.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 8.05 மணிக்கு கானோல்ஸவம், 8.30 மணிக்கு சிங்க வாகனத்தில் சாமி எழுந்தருளல் போன்றவை நடைபெறும். 23-ந் தேதி இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 24-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆதிசே‌‌ஷ வாகனத்திலும், 25-ந் தேதி இரவு 9 மணிக்கு யானை வாகனத்திலும், 26-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு பல்லக்கிலும், இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்திலும் சாமி எழுந்தருளல் நடக்கிறது. 27-ந் தேதி இரவு 8.10 மணிக்கு நகைச்சுவை இசைப்பட்டிமன்றம், இரவு 9.30 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி எழுந்தருளல் ஆகியவை நடக்கின்றன.

9-ம் திருவிழாவான 28-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நடைபெறும். பின்னர் இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 29-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இன்னிசை சொல்லரங்கம், இரவு 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு பூஜையும், மாலையில் மண்டகப்படி மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News