குழந்தை பராமரிப்பு
ஆட்டிசம்

ஆட்டிசம் நோய் அல்ல... இது ஒரு குறைபாடு...

Published On 2022-04-02 03:28 GMT   |   Update On 2022-04-02 07:43 GMT
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நீண்டகால குழந்தைகள் என்று சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந் தேதியை, ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின’மாக கடைப்பிடித்து வருகிறோம்.
கடந்த தலைமுறையைவிட இந்தத் தலைமுறையினருக்கு ஓரளவு அறிமுகமான சொல்தான் ஆட்டிசம். பலரும் நினைப்பதுபோல, இது வியாதி இல்லை. இது ஒரு குறைபாடு, அவ்வளவே. போதுமான வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால், இதில் இருந்து மீள்வதற்கு வழிகள் உண்டு.

இதுதான் ஆட்டிசம் என்று வரையறுத்துச் சொல்லமுடியாது. பல குறைபாடுகளின் ஒன்றிணைவு இது. நரம்பியல் குறைபாடு காரணமாக, மூளையின் செயல்திறனில் ஏற்படும் மாற்றம்தான் ஆட்டிசத்துக்கு வழி வகுக்கிறது. ஆட்டிசத்தின் முதன்மை விளைவுகளில் ஒன்று பலவீனமான சமூகத் தொடர்பு.

அறிகுறிகள்:

ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டாமல் இருத்தல், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது, பயம், ஆபத்து ஆகியவற்றை உணராமல் இருப்பது, பாவனை, விளையாட்டுகள் இல்லாமல் இருப்பது, வித்தியாசமான நடவடிக்கைகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப செய்வது, காரணம் இல்லாமல் அழுகை, சோகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது, வலியை உணராமல் இருப்பது, மாற்றங்களை அசவுகரியமாக உணர்வது, பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்வது முதலானவை இதன் அறிகுறிகளாகும்.

குழந்தைகளின் செயல்பாடுகளில் தெரியும் மாற்றத்தை வைத்தே, ஆட்டிசத்தை இனம் கண்டறிய முடியும்.

குழந்தைகள் புலம்பி அழாமலோ, தனக்குத் தேவையானதைச் சுட்டிக்காட்டாமலோ இருப்பது. ஒன்றரை வயது வரை, ஒரு சொல் வார்த்தைகளையோ, இரண்டு வயது வரை இரண்டு சொற்கள் கொண்ட சொற்றொடரையோ பேசாமல் இருப்பது.

நிறைய பொருட்களுடனும், பொம்மைகளுடனும் இருப்பது, அவற்றைச் சரியாகக் கையாளத் தெரியாதது. எதற்குமே புன்னகைக்காமல் இருப்பது.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்தையும் குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயோ அல்லது இரண்டு வருடங்களுக்குள்ளேயோ கண்டுபிடித்து விடலாம்.

இவற்றிற்கு முறையான பயிற்சிகள் அளிப்பதன் மூலம் ஆட்டிசம் குறைபாட்டில் இருந்து குழந்தைகளை மீட்கலாம்.

எவ்வளவு விரைவில் அடையாளம் காண்கிறோமோ அவ்வளவு நல்லது. இதை100 சதவீதம் குணப்படுத்த முடியாது, ஆனால், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், வளர்ச்சிக்கான பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி ஆகிய தொடர் பயிற்சியின் மூலம் ஓரளவு சீரான நிலைக்குக் கொண்டு வரமுடியும்.

ஆட்டிசம் கண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்கிவிட வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்தல், பொது இடங்களில் குழந்தையால் அவமானம் என்று நினைப்பதை அறவே தவிர்க்க வேண்டும், குறிப்பாக குழந்தைக்கு இத்தனை வயது ஆகிவிட்டதே எனக் கவலைப்படக்கூடாது, குற்ற உணர்வு அறவே கூடாது, வித்தியாசமாக இருப்பதற்கான துணிச்சலை வரவழைத்துக்கொள்தல், குழந்தையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.
Tags:    

Similar News