செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் - வேட்பாளர்கள் யார்?

Published On 2019-02-25 03:12 GMT   |   Update On 2019-02-25 03:12 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParliamentElection #BJP #ADMK
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், அதே நேரத்தில் மற்றொரு புறம் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், 6 தொகுதிகள் எவை என்பது கண்டறியப்பட்டுவிட்டன. அதற்கு பா.ம.க.வும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஒரு தொகுதி மட்டும் தான் எது என்பது பேச்சுவார்த்தையில் உள்ளது.

அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் வடசென்னை தொகுதியை பா.ஜ.க. விரும்பவில்லை. அதற்கு மாற்றாக திருப்பூர் அல்லது தஞ்சாவூர் தொகுதியை அந்த கட்சி கேட்டு வருகிறது.



அதே நேரத்தில், 4 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் யார் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

மேலும், பா.ஜ.க.வுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும், தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தமும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. #ParliamentElection #BJP #ADMK
Tags:    

Similar News