செய்திகள்
கோப்புபடம்

உத்திரமேரூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

Published On 2020-10-31 09:31 GMT   |   Update On 2020-10-31 09:31 GMT
உத்திரமேரூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் கிளக்காடு கிராமத்தை சேர்ந்த கோதண்டம் (வயது 40) லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் கல் ஏற்றி வர லாரியில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்தது.

இதில் கோதண்டம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோசையா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த குன்னங்கொளத்தூரை சேர்ந்தவர் துரை (50). இவர் தனது நிலத்தில் பயிரிடப்பட்ட கத்திரிக்காயை விற்பதற்காக செங்கல்பட்டு சந்தைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக அதிவேகமாக வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துரை உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சீபுரத்தை அடுத்த ஆட்டுப்புத்தூர் ஜங்ஷன் என்ற இடத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிங்காடிவாக்கம் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News