செய்திகள்
கோவை காரமடையில் மழைவெள்ளம் தேங்கியதால் அழுகிய தக்காளி செடிகள்.

வரத்து குறைவால் கடும் விலையேற்றம்- மழை வெள்ளம் தேங்கியதால் அழுகிய தக்காளி செடிகள்

Published On 2021-11-24 04:12 GMT   |   Update On 2021-11-24 04:12 GMT
மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி செடிகள் அனைத்தும் அழுகி வீணாகி விட்டதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
காரமடை:

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, நாச்சிபாளையம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, மதுக்கரை, பிச்சனூர், திருமலையம்பாளையம், ரொட்டி கவுண்டனூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, செம்மேடு, மாதம்பட்டி, சென்னனூர், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், அன்னூர் மற்றும் காரமடை சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளிகள் பயிரிடப்படுகின்றன.

இங்கு பயிரிடும் தக்காளிகளை கோவையில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கோவை மார்க்கெட்டுக்கு கோவை சுற்றுவட்டார பகுதிகளை தவிர கர்நாடகாவில் இருந்தும் தக்காளிகள் வந்தது.

கடந்த சில வாரங்களாக கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர்களுக்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் தக்காளி செடிகள் அனைத்தும் நாசமாகின. மேலும் தக்காளி பழங்கள் செடியிலேயே கருகி அழுகும் நிலையும் காணப்படுகிறது.

தக்காளி செடியில் பூ, காய்கள் பூத்து, பழங்கள் பறித்து விற்பனைக்கு கொண்டு செல்ல விவசாயிகள் தயாராகி வந்தனர். ஆனால் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி செடிகள் அனைத்தும் அழுகி வீணாகி விட்டதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

தொடர் மழையால் பயிர்கள் சேதம் மற்றும் வரத்து குறைவு எதிரொலி காரணமாக கோவை மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது.

மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு டிப்பர்(25 கிலோ) தக்காளி ரூ.1800-க்கும், ஒரு கிலோ ரூ.70-க்கும் விற்பனையாது. நாட்டு தக்காளி ஒரு டிப்பர் ரூ.1500-க்கும், ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்கப்படுகிறது.

மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து தக்காளியை வாங்கி வந்து சில்லரை மார்க்கெட்டுகளில் விற்கும் போது விலை கூடுதலாக காணப்படுகிறது. கடந்த வாரம் வரை சில்லரை மார்க்கெட்டில் ரூ.50க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி தற்போது வரலாறு காணாத அளவுக்கு ரூ.140-க்கு விற்பனையாகிறது. வரத்து தொடர்ந்து குறைந்தால் விலையும் தொடர்ந்து ஏற்றம் காண வாய்ப்புள்ளது.

ஆப்பிள் பழங்களும் ரூ.140-க்கு விற்பனையாகிறது. அதே விலைக்கு தற்போது தக்காளியும் விற்பனையாவதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். தக்காளி அனைத்து சமையல்களுக்கு தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் தற்போது தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்பதை யூடியூப்பில் மக்கள் தேடி பார்த்து வருகிறார்கள்.
Tags:    

Similar News