செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு

Published On 2021-11-24 09:16 GMT   |   Update On 2021-11-24 09:16 GMT
பூண்டி ஏரிக்கு 8,444 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 9,473 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூந்தமல்லி:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையடுத்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளும் முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. கடந்த வாரம் பலத்த மழை கொட்டியதையடுத்து ஏரிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக 38 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லாததால் குடிநீர் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே போல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 1,151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை இது மேலும் அதிகரிக்கப்பட்டு 2,149 கன அடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 21.34 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் நீர் இருப்பை 21 அடிக்கு கீழ் கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. இதில் 2,944 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

புழல் ஏரியில் நேற்று 1,201 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று காலை நிலவரப் படி ஏரியில் இருந்து 1,698 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 18.97 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,807 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு 1,212 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

சோழவரம் ஏரியின் மொத்த உயரம் 18.86 அடி. இதில் 16.86 அடிக்கு தண்ணீர் உள்ளது. 372 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. 615 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் 32.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 8,444 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 9,473 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 149 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News