செய்திகள்
பச்சகுப்பம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் பாலாற்று வெள்ளம்

ஆம்பூர் பாலாற்றில் கடும் வெள்ளம்- தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2021-09-21 05:34 GMT   |   Update On 2021-09-21 05:34 GMT
பாலாறு படுகையில் உள்ள கிராம மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர்:

தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பாலாற்றின் கிளை நதிகளான வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள சாரங்கல் பெருங்காணாறு, பத்தலபல்லி பகுதியிலுள்ள மலட்டாறு, குண்டல பல்லியில் உள்ள குட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த கிளை ஆறுகளில் பாய்ந்தோடி வரும் வெள்ளம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பாலாற்றில் கலக்கிறது.

ஏற்கனவே பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது இந்த கிளை ஆறுகளின் வெள்ளம் பாலாற்றில் கலந்துள்ளதால் பச்சகுப்பம் பகுதியிலிருந்து பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது.

ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லக்கூடிய பச்சகுப்பம் தரைப்பாலத்தை முற்றிலுமாக மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. இதனால் பச்சகுப்பம் தரைப்பாலத்தில் இருந்து குடியாத்தம் செல்லும் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் நரியம்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது. பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் பொதுமக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தண்ணீரில் இறங்க வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆறு மற்றும் ஏரி கால்வாய் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

பாலாறு படுகையில் உள்ள கிராம மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags:    

Similar News