செய்திகள்
கோப்புபடம்

கோர்ட் தீர்ப்பால் ‘பேஸ்புக்’கின் சந்தை மதிப்பு ரூ.74.24 லட்சம் கோடியாக உயர்வு

Published On 2021-06-30 13:02 GMT   |   Update On 2021-06-30 13:12 GMT
சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றை விலைக்கு வாங்கியது தொடர்பாக பெடரல் வர்த்தக கமி‌ஷன் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

வாஷிங்டன்:

பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.

பேஸ்-புக் நிறுவனம் மீது அமெரிக்காவின் நன்னடத்தை விதிகளை மீறியதாக அந்நாட்டு அரசு சார்பில் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

சிறு, குறு நிறுவனங்களை அச்சுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பேஸ்புக் நிறுவனம் மீது கூறப்பட்டன.

மேலும் அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றை விலைக்கு வாங்கியது தொடர்பாக பெடரல் வர்த்தக கமி‌ஷன் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

சிறிய போட்டியாளர்களை நசுக்குவதற்காக சந்தையில் தவறான நடவடிக்கைகளை எடுத்ததாக தெரிவிக்கப் பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் மீதான வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அந்நிறுவனம் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

வாஷிங்டன் டி.சி.யின் அமெரிக்க மாவட்ட கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் போஸ் பெர்க் தனது உத்தரவில் கூறும்போது, இந்த வழக்கில் முன் வைக்கப்பட்ட சான்றுகள் பேஸ்புக் நிறுவனம், சந்தையில் ஏகபோகமாக செயல்படுவது நிரூபிக்க போதுமான உண்மைகளை அளிக்க தவறிவிட்டது என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்...இந்திய பயணிகளுக்கான தடை ஜூலை 15 வரை நீட்டிப்பு - பிலிப்பைன்ஸ் அறிவிப்பு 

பேஸ்புக் மீதான வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டதால் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்தது. பேஸ்புக் நிறுவன பங்குகள் 4 சதவீதம் உயர்ந்து ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியது.

இதன் இந்திய மதிப்பு ரூ.74.24 லட்சம் கோடி ஆகும். பேஸ்புக் நிறுவனம் முதல் முறையாக ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை தொட்டுள்ளது.

இதற்கு முன்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டிய அமெரிக்க நிறுவனங்களில் ஆப்பிள், மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் ஆல்ப்பெட் வரிசையில் பேஸ்புக் நிறுவனமும் இணைந்தது.

Tags:    

Similar News