ஆன்மிகம்
திண்டுக்கல் ஸ்ரீநிவாசப் பெருமாள்

திருமண வரம் அருளும் திண்டுக்கல் ஸ்ரீநிவாசப் பெருமாள்

Published On 2020-01-07 05:45 GMT   |   Update On 2020-01-07 05:45 GMT
மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு திண்டுக்கல் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில். மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள் எனவும் உற்சவர் ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாசர் எனவும் அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலின் நுழைவு வாயிலில் சந்நிதியை எதிர்நோக்கி சுதையால் செய்யப்பட்ட பெரிய சுமார் 20 அடிக்கும் உயரமான விஸ்வரூப கருடாழ்வார் இருகைகூப்பி பெருமாளை வணங்கி நிற்கிறார்.

இத்திருக்கோயிலின் தல விருட்சம் நெல்லி மரம் ஆகும். அலர்மேல்மங்கைத் தாயார் தனிக்கோயில் தாயாராக படிதாண்டா பத்தினியாக எழுந்தருளியுள்ளார். தீர்த்தம் சூரிய தீர்த்தம் எனப்படுகிறது. இறைவன் பத்ம விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

அபயவரத ஆஞ்சநேயர் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவர் கிரக தோஷங்களை நீக்கி சுகம் அளிக்கக்கூடிய சக்தி படைத்தவர். தனி சந்நிதியில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வாரைச் சுற்றிலும் திருமாலின் தசாவதாரங்களும் பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கரம் ஏந்தி நரசிம்மர் அருள்கிறார். நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் எழுந்தருளியிருக்கின்றனர்.

உற்சவர் கல்யாண ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருப்பதால் இத்திருக்கோயில் திருமணங்கள் நடைபெறும் தலமாக உள்ளது. திருமணத்தடை நீங்க, கல்யாண ஸ்ரீநிவாசனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் திருக்கோயிலாகும். மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

திருமால் குடிகொண்ட திண்டுக்கல் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் தாலுகா அலுவலக மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி. மீ. தொலைவிலும் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் மலையடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளது.
Tags:    

Similar News