ஆன்மிகம்
பக்தர்களை உற்சாகப்படுத்தும் வெண்ணெய்த்தாழி உற்சவம்

பக்தர்களை உற்சாகப்படுத்தும் வெண்ணெய்த்தாழி உற்சவம்

Published On 2021-04-03 08:00 GMT   |   Update On 2021-04-03 08:00 GMT
ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவத்தின்போது கையில் வெண்ணெய் குடத்துடன் ராஜகோபாலசாமி எழுந்தருளும் அழகை பக்தர்கள் கண்குளிர தரிசிப்பார்கள்.
ராஜகோபாலசாமி கோவிலில் அர்த்தமண்டபம், மூன்றாம் கோபுரம் ஆகியவற்றை முதலாம் குலோத்துங்க மன்னன் கட்டினார்.

மன்னார்குடி ராஜகோபால சாமி கோவிலில் வல்லாள மகாராஜன் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கருட வாகன மண்டபம், யானை வாகன மண்டபம், பலகனி மண்டபம், வெண்ணெய்த்தாழி மண்டபம், புன்னை வாகன மண்டபம் என 7 மண்டபங்கள் உள்ளன. கோவிலுக்கு கிழக்கு பக்கமுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 154 அடி ஆகும். மேற்கு கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது அழகுற காணப்படுகிறது.

தெப்பத்திருவிழா

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ஆண்டுதோறும் நடைபெறுவது போல ராஜகோபாலசாமிக்கும் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறுகிறது. கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி மாதத்தில் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா, ஆடி மாதத்தில் செங்கமலத்தாயார் தேர்த்திருவிழா, மார்கழி மாதத்தில் ராப்பத்து, பகல்பத்து உற்சவம், ஏகாதசி திருவிழா போன்ற விழாக்கள் மிக சிறப்பு வாய்ந்ததாகும். பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்களும், விடையாற்றி விழா 12 நாட்கள் என 30 நாட்கள் திருவிழா நடைபெறும்.

அதில் வெண்ணெய்த்தாழி, கருடசேவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். மன்னார்குடிக்கு பெருமை சேர்ப்பது ஹரித்ரா நதி தெப்பக்குளம் ஆகும். 23 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தின் நடுவில் வேணுகோபாலன் திருக்கோவில் உள்ளது.

வெண்ணெய்த்தாழி உற்சவம்

நான்கு கரைகளிலும் வீதிகள் உள்ளன. குளத்தின் தெற்குகரை நீண்ட படிக்கட்டுகளை கொண்டது. நான்கு கரைகளிலும் ஆஞ்சநேயர், ராமர், விநாயகர், சீனிவாசன் ஆகியோருக்கு கோவில்கள் அமைந்துள்ளன.

வெண்ணெய்த்தாழி உற்சவத்தின்போது கையில் வெண்ணெய் குடத்துடன் ராஜகோபாலசாமி எழுந்தருளும் அழகை பக்தர்கள் கண்குளிர தரிசிப்பார்கள். இந்த உற்சவம் பக்தர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். வீதி உலா வரும் ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் உற்சாகம் பொங்க வெண்ணெய் தெளித்து வழிபடுவார்கள். அப்போது பக்தி வெள்ளம் கரைபுரண்டோடும்.

சகல செல்வங்களையும் தரும் ராஜகோபாலனை தரிசிக்க அனைவரும் வருகை தந்து ராஜகோபாலனின் அருள் பெற வேண்டும் என எஸ்.எம்.டி கருணாநிதி பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News