ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

தஞ்சை பெரியகோவிலில் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2020-11-16 05:59 GMT   |   Update On 2020-11-16 05:59 GMT
தஞ்சை பெரியகோவிலில் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். நேற்று வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகை காணப்பட்டதால் போலீசாரும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கோவில்கள் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டது. அன்று முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரியகோவிலுக்கு காலை முதல் பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் வாகனம் நிறுத்துமிடமும் நிரம்பி வழிந்தது. வெளியூர்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவினை அருகில் உள்ள சோழன்சிலை பூங்கா மற்றும் திலகர் திடல் ஆகிய பகுதிகளில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டனர்.

நேற்று வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகை காணப்பட்டதால் போலீசாரும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Tags:    

Similar News