உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி

நாளை வைகுண்ட ஏகாதசி- காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

Published On 2022-01-12 11:26 GMT   |   Update On 2022-01-12 11:26 GMT
கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம்:

வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடைபெற உள்ளது. பெருமாள் கோவில்களில் அதிகாலையில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் வழக்கமாக திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசிப்பது வழக்கம்.

தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் நாளை தரிசனத்துக்கு தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருந்திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினால், பொதுமக்களின் நலன் கருதி இக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழவில் நாளை (13-ந்தேதி) பொதுமக்களின் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கோவிலின் ஆகம விதிகளின்படியும் பழக்க வழக் கத்தின் படியும் சன்னதிக் குள்ளேயே பூஜைகள் மட்டும் நடைபெறும்.

எனவே பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நேரலையை நாளை காலை 6 மணி முதல் https//youtube/nBsmNhigTji என்ற இணையதள முகவரியில் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் வீர ராகவர் கோவிலில் நாளை சொர்க்வாசல் திறக்கப்படும் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், காலை 6.30 மணிக்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News