லைஃப்ஸ்டைல்
ஜாக்கிங்

ஜாக்கிங் செய்யும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளாவிட்டால்..

Published On 2020-12-25 02:13 GMT   |   Update On 2020-12-25 02:13 GMT
ஓடும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ளாவிட்டால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓட்டப்பயிற்சியை தொடர்வது சிரமமாகிவிடும்.
ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். உடல் வலிமையை அதிகரிக்கச்செய்யும். களைப்படையாமல் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான ஆற்றலையும் தரும். மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

ஓட்டப்பயிற்சியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஓடும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ளாவிட்டால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓட்டப்பயிற்சியை தொடர்வது சிரமமாகிவிடும். கணுக்கால்களில் வலி ஏற்படக்கூடும். அதி வேகமாகவோ, மெதுவாகவோ ஓடக் கூடாது. சீரான வேகத்தை பராமரிப்பதும், கால் பாதங்களை சரியாக தரையில் வைப்பதும்தான் ஓடுவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். ஓடும்போது சில நுட்பங்களை பின்பற்றுவது காயம், வலி ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

ஜாக்கிங் செய்வதாக இருந்தால் மிதமான வேகத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஓடும்போது தலையை சாய்வாகவோ, தோள்பட்டைகளை சாய்வாகவோ, தளர்வாகவோ வைத்திருக்கக் கூடாது. மார்பு பகுதியை அகலமாக விரித்து, நன்றாக நிமிர்த்தியபடி ஓட வேண் டும். கைகளை முன்னோக்கி நீட்டியபடி ஓடக் கூடாது. காலின் நடுப்பகுதிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது.

டிரெட்மில்லில் பயிற்சி பெறுவதாக இருந்தால் முதுகெலும்பை நேராக வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை தளர்வாக வைத்திருக்க வேண்டும். சமதளப்பரப்பில் ஓடுவதுதான் கால்களுக்கு நல்லது. விரல்பகுதிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஓடும்போது பார்வையை நேராக செலுத்த வேண்டும். கால்களை தாளம்போடும்படி இயக்க வேண்டும். முழங்கை 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். கைகள் தளர்வாகவும் இருக்க வேண்டும்.

தரையில் கால்களையும், கைகளையும் நீட்டியவாறு உடல்பகுதியை மேலும், கீழும் அசைப்பது, குனிந்து நிமிர்வது, ஒரு கையை மட்டும் தரையில் ஊன்றி பக்கவாட்டில் உடற்பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்வது உடலுக்கு நல்ல வடிவத்தையும், வலிமையையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
Tags:    

Similar News