செய்திகள்
சேது எக்ஸ்பிரஸ் ரெயிலை காலிபெட்டிகளுடன் இயக்கி ஆய்வு நடந்த போது எடுத்த படம்.

பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயிலை மெதுவாக இயக்கி ஆய்வு

Published On 2021-06-18 00:15 GMT   |   Update On 2021-06-18 00:15 GMT
பாம்பன் தூக்குப்பாலத்தில் சென்சார் கருவியில் ஏற்பட்ட பழுது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ரெயிலை மெதுவாக இயக்கி அதிர்வுகள் உள்ளதா? என சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பரிசோதித்தனர்.
ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் அமைந்துள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் ரெயில்கள் செல்லும் போது அதிர்வுகளை கண்டறிய 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்னை ஐ.ஐ.டி. மூலம் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அதிகாலை தூக்குப்பாலத்தை சேது எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்ற போது வழக்கத்தைவிட அதிக அதிர்வுகள் சென்சார் கருவிகளில் பதிவானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரெயில்வே பொறியாளர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில், தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்ட சென்சார் கருவியில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் பாம்பன் தூக்குப்பாலத்தில் நேற்று சென்னையில் இருந்து வந்த ஐ.ஐ.டி. குழுவினர் 3 பேர், மதுரை ரெயில்வே கோட்ட பொறியாளர் கிரிஸ்குமார், கூடுதல் பொறியாளர் முத்தையா மற்றும் அதிகாரிகள் தூக்குப்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் எந்த இடத்தில் பொருத்தப்பட்ட சென்சார் கருவியில் பழுது உள்ளது? என்பதை கண்டறியும் பணி நேற்று மாலை வரை நீடித்தது. பின்னர் ஒரு சென்சார் கருவியில் பழுது இருந்ததை கண்டுபிடித்து அகற்றிவிட்டு, புதிய சென்சார் கருவி பொருத்தினர்.

அதன்பின்பு தூக்குப்பாலம் வழியாக ரெயிலை இயக்கி சோதனை நடத்த முடிவு செய்தனர். இதற்காக சேது எக்ஸ்பிரஸ் ரெயிலை காலி பெட்டிகளுடன் கொண்டு வந்து, தூக்குப்பாலம் வழியாக முன்னும்பின்னும் பல முறை இயக்கி சோதிக்கப்பட்டது. அப்போது, பரிசோதித்ததில் தூக்குப்பாலத்தில் அதிர்வு இல்லை என்பது தெரியவந்ததால், அனைவரும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மீண்டும் ஆய்வுகள் நடத்தி உறுதி செய்த பின்பே பாம்பன் பாலத்தில் பயணிகளுடன் ரெயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே 2-வது நாளாக நேற்று பாம்பன் ரெயில் பாலத்தில் பயணிகளுடன் ரெயில்  போக்குவரத்து நடைபெறவில்லை. ராமேசுவரத்தில் இருந்து நேற்று திருப்பதி, சென்னை, கோவை ரெயில்கள் மண்டபத்தில் இருந்தே புறப்பட்டு சென்றன. திருச்சியில் இருந்து ராமேசுவரம் வந்த பயணிகள் ரெயில் ராமநாதபுரம் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News