ஆன்மிகம்
கிருஷ்ணன்

சகாதேவனுக்கு கட்டுப்பட்ட கிருஷ்ணன்

Published On 2021-02-03 07:13 GMT   |   Update On 2021-02-03 07:13 GMT
சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள்.
கவுரவர்களால் திட்டமிட்டே வனவாசம் அனுப்பட்டவர்கள், பாண்டவர்கள். அவர்களின் 12 வருட வனவாசமும், 1 வருட மறைவு வாழ்க்கையும் கழிந்து விட்டது. பாண்டவர்களுக்கு இப்போது வாழ்வதற்கு இடம் வேண்டும். சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள்.

அதுபற்றி தங்களின் சார்பாக கவுரவர்களிடம் பேசவும், தங்களின் கோரிக்கையை எடுத்துரைக்கவும் யுதிஷ்டிரன் எனப்படும் தருமன், கிருஷ்ணரைத் தேர்வு செய்தான்.

அதன்படி கிருஷ்ணரை அழைத்து, “கண்ணா.. நீ கவுரவர்களிடம் சென்று, எங்களுக்கான ராஜ்ஜியத்தை கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், ஐந்து சிறிய நாடுகளையாவது கேள். அதுவும் மறுக்கப்பட்டால், ஐவருக்கும் ஐந்து வீடுகளையாவது கேள். எப்படியாவது போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு” என்றான்.

கிருஷ்ணரும் அப்படியேச் செய்வதாகச் சொன்னார். மேலும் இதுபற்றி மற்றவர்களிடமும் கருத்து கேட்டு விட்டு அஸ்தினாபுரம் புறப்படுவதாகச் சொன்னார். ஆனால் பீமனோ, “கண்ணா.. வெறும் ஐந்து வீடுகளையாவது யாசகமாக பெற்று நாம் வாழ வேண்டுமா.. எனக்கு போர்தான் வேண்டும். அப் போதுதான் துரியோதனன் மற்றும் துச்சாதனனைக் கொல்வதாக கூறிய என் னுடைய சபதம் நிறைவேறும்” என்று கர்ஜித்தான். அர்ச்சுனனும் இதே கருத்தைத்தான் சொன்னான். ஆனால் பீமனின் அளவுக்கு இல்லாமல், கொஞ்சம் தன்மையாக கூறினான்.

பாண்டவர்களில் ஒருவனான நகுலனுக்கும் போர்தான் சரியான வழி என்று பட்டது. திரவுபதியோ, “கண்ணா.. என் சபதம் என்னாவது? துரியோதனன் அழியவில்லை என்றால், நான் என்னுடைய கூந்தலை அள்ளி முடிவது எப்போது?” என்று கேட்டால். அந்த தொனியே, அவள் போரை விரும்புகிறாள் என்று பறைசாற்றியது. இப்போது கிருஷ்ணன், சகாதேவனைக் காணச் சென்றார். அவனிடமும், “சகாதேவா.. நான் கவுரவர்களிடம் தூது செல்லப்போகிறேன். நீ போரை விரும்புகிறாயா.. இல்லையா.. போரை நிறுத்துவதற்கு உன்னிடம் ஏதாவது வழி இருக்கிறதா?” என்று கேட்டார், கிருஷ்ணன்.

ஜோதிடக் கலையில் வல்லவனாக இருந்த சகாதேவனுக்கு, நடக்கப்போகும் அனைத்தும் தெரிந்திருந்தது. அதனால் அவன் வேடிக்கையாக... ‘இதைச் செய்தால் போர் நடக்காது’ என்பதைப் போல ஒரு வழியைக் கூறினான். அந்த வழி இதுதான்.. “கிருஷ்ணா.. பீமனின் கையில் உள்ள கதையை உடைத்து விட்டு, அர்ச்சுனனின் வில்லை ஒடித்து விட்டு, திரவுபதியின் கூந்தலையும் அறுத்துவிட வேண்டும். மேலும் நீ கவுரவர்களிடம் தூது செல்லாத வகையில் உன்னையும் கட்டிப்போட்டு விட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்தப் போரை நிறுத்திவிடலாம்” என்றான்.

உடனே கிருஷ்ணன், “என்னை கட்டிப்போடுவாயா? உன்னால் முடிந்தால் அதைச் செய்து காட்டு” என்று கூறிவிட்டு, ஆயிரம் உருவங்களை எடுத்து அங்கே நின்றார். அதைப் பார்த்த சகாதேவன், பத்மாசனத்தில் அமர்ந்து கிருஷ்ணரைத் துதிக்கத் தொடங்கிவிட்டான். அவனது பக்திக்கு கட்டுப்பட்ட கிருஷ்ணர், தன்னுடைய அனைத்து உருவங்களையும் ஒரே உருவமாக்கி, பின்னர் அந்த உருவத்தையும் சகாதேவனின் நெஞ்சில் சேரும்படி செய்துவிட்டார்.

அதன்பிறகு “சகாதேவா.. நீ உன் பக்தியால் என்னை கட்டிவிட்டாய். இப்போது என்னை விடுவித்து விடு” என்று கேட்டார், கிருஷ்ணர். அதற்கு சகாதேவன், “நான் உன்னை விடுவிக்க வேண்டுமென்றால், நடைபெறப்போகும் போரில் நீ குந்தியின் ஐந்து புத்திரர்களையும் காப்பாற்ற வேண்டும்” என்று கேட்டான்.

உடனே கிருஷ்ணன், “சகாதேவா.. நன்றாக யோசித்துக் கொள். இந்தக் கேள்வியில் ஏதேனும் பிழை இருப்பதாக நீ உணர்ந்தால், அதைத் திருத்தம் செய்து மீண்டும் கேட்கலாம்” என்றார். அதற்கு சகாதேவன், “அப்படி ஒன்றும் இல்லை.. நான் கேட்டதை மட்டும் செய்” என்றான். அந்த வரத்தையே அவனுக்கு அளித்தார், கிருஷ்ணன்.

அதன்படியே மகாபாரதப் போரில் குந்தியின் மகன்களில் ஒருவரான கர்ணனைத் தவிர, மற்ற ஐவரும் உயிரோடு இருந்தனர். கர்ணன் போர்க்களத்தில் இறந்து கிடந்தபோது, அவனை தன்னுடைய மடியில் போட்டு அழுதாள், குந்தி. அப்போதுதான் பாண்டவர்கள் ஐவருக்கும், கர்ணன் தன் சகோதரன் என்பது தெரியவந்தது. இப்போது சகாதேவனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. அன்று நான் ஒரு வரம் கேட்டபோது, கிருஷ்ணன் நன்றாக யோசித்து கேட்கும்படி கூறியதை நினைவுபடுத்திக் கொண்டான். தான் படித்த ஜோதிடக் கலையால், தனக்கு ஒரு சகோதரன் இருப்பதையே கண்டறியாமல் விட்டு விட்டதை நினைத்து அவன் வேதனை அடைந்தான். அதனால் தன்னிடம் இருந்த ஜோதிடம் தொடர்பான ஓலைச்சுவடிகளை வீசி எறிந்தான். அவற்றில் சில போர்க்களத்தில் பற்றி எரிந்த தீக்கு இரையாகின.
Tags:    

Similar News