செய்திகள்
பள்ளிக் கல்வித்துறை

9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு- பள்ளிக் கல்வித்துறை முடிவு

Published On 2021-04-11 08:10 GMT   |   Update On 2021-04-11 08:10 GMT
மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த திறனறி தேர்வுக்காக பிரத்தியேகமான பயிற்சி வினாக்கள் அடங்கிய புத்தகங்களை தயாரித்து இருக்கிறது.

சென்னை:

கொரோனா காரணமாக இந்த ஆண்டு 9 முதல் 11 - ஆம் வகுப்பு வரையான மாணவர்கள் தேர்வு இல்லாமல் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக 9 முதல் 11 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு இருக்கிறது .

இந்த நிலையில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை, அதாவது எந்த அளவிற்கு மாணவர்கள் படித்து இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கான தேர்வு நடத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக கேள்விகளை அனுப்பி, அதற்கான பதில்களை பெறுவதற்கும் பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த திறனறி தேர்வுக்காக பிரத்தியேகமான பயிற்சி வினாக்கள் அடங்கிய புத்தகங்களை தயாரித்து இருக்கிறது. அந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதிலிருந்து மாணவர்களுக்கு கேள்விகள் வழங்கப்பட்டு, பதில்கள் பெறப்படும் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்வு இல்லை என்று முதல்-அமைச்சர் அறிவித்த பிறகு, தேவையில்லாமல் இதுபோன்ற தேர்வுகளை நடத்துவது மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இது தேவையற்ற செயல் என்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News