செய்திகள்
பள்ளி மாணவர்கள் (கோப்புப்படம்)

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட சுமை கூடுகிறது

Published On 2019-11-07 10:24 GMT   |   Update On 2019-11-07 10:24 GMT
8-ம் வகுப்புக்கான முப்பருவ பாடப்புத்தகங்களை ஒன்றாக இணைத்து அடுத்த கல்வி ஆண்டு முதல் (2020-21) நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை:

பள்ளி மாணவர்களுக்கு பாடச்சுமையால் மன அழுத்தம் ஏற்படக் கூடாது என்பதற்காக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் முறை செயல்படுத்தப்பட்டது.

2012-13-ம் ஆண்டு முதல் இத்திட்டம் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் எளிமையான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடப்புத்தகங்களையும் 3 பருவமாக பிரித்து தேர்வு நடத்தப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்றலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு பருவத் தேர்வும் முடிந்தவுடன் அந்த பாடப்புத்தகத்தை மீண்டும் படிக்கவோ, கொண்டு வரவோ தேவையில்லை. இதனால் மாணவர்கள் ஒட்டு மொத்தமாக படித்து தேர்வு எழுத வேண்டிய நிலையில் இருந்து மீண்டனர்.


இந்த நிலையில் 8-ம் வகுப்புக்கான முப்பருவ பாடப்புத்தகங்களை ஒன்றாக இணைத்து அடுத்த கல்வி ஆண்டு முதல் (2020-21) நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது மீண்டும் மாணவர்களுக்கு பாட புத்தக சுமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தற்போது இந்த மாணவர்களுக்கு 5 பாடப்புத்தகங்களை ஒருங்கிணைத்து 3 புத்தகங்களாக கொடுக்கப்படுகிறது.

முப்பருவ பாடப்புத்தகங்களை ஒரே புத்தகமாக வழங்கிட 5 பாடத்திட்டத்திற்கும் 5 புத்தகங்களாக படிக்கின்ற பழைய நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான வழி முறைகளை கல்வித்துறை செயல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் முப்பருவ முறையில் வழங்கப்பட்ட புத்தகங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 3-வது பருவ அடிப்படையில் இறுதித் தேர்வை மாணவர்கள் இதுவரை எழுதி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு 5-8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என அறிவிக்கப்பட்டதால் முழுமையான பாடத்திட்டத்தின்படி தேர்வு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள்.

இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மாணவர்கள் பாடச்சுமை அதிகரிக்க கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட முப்பருவ முறையை பின்பற்றுகிறோம் என்றனர்.

மீண்டும் மாணவர்களுக்கு பாடச் சுமையை அதிகரிக்க கூடாது, பழைய முறையில் கற்பித்தல் திட்டம் செயல்படுத்த வேண்டும். அதுவே மன அழுத்தம், கஷ்டம் இல்லாமல் எளிதாக கற்க உதவும் என்று பள்ளி ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News